புதுடெல்லி – 2015 ஆம் ஆண்டுக்கான 63-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகராக அமிதாப்பச்சனும், சிறந்த நடிகையாக கங்கான ரெனாவத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறந்த படமாக பாகுபலி அறிவிக்கப்பட்டது. சிறந்த இயக்குனராக பாஜிரோ மஸ்தானி படத்தினை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிக்கு அறிவிக்கப்பட்டது. தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டது.
அதேபோல் விசாரணை படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரக்கனிக்கும், சிறந்த படத்தொகுப்பாளராக மறைந்த கிஷோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதி சுற்றில் நடித்த ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளராக தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 63-வது தேசிய திரைப்பட விருதுகளை அதிபர் பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார். விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாதா சாகேப் விருது இந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.