சென்னை, மார்ச் 16 – “நல்ல திரைப்படப் பாடல்களையும் இலக்கியம் என்று வகைப்படுத்தலாம்” என்று கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான பிறைசூடன் கூறியுள்ளார்.
ஆரணி அருகேயுள்ள குண்ணத்தூர் ஸ்ரீபாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு “திரைப் பாடல்களும் இலக்கியமே” என்ற தலைப்பில் பிறைசூடன் பேசினார்.
“இயல், இசை, நாடகம் என தமிழை மூன்றாகப் பிரித்தான் தமிழன். உலகத்தை பஞ்ச பூதங்களாகப் பிரித்தவனும் தமிழன்தான். பெண் பருவத்தை ஏழாக பிரித்தவன் தமிழன். ஆண் பருவத்தையும் ஏழாகப் பிரித்தவன் தமிழன். இவ்வாறு எக்காரணமும் இல்லாமல் தமிழில் சொற்கள் இருக்காது” என்று அவர் தனது உரையில் கூறினார்.
“இசையில் இறைத்தன்மை கொண்ட இசையும் உண்டு. சாத்தானின் தன்மை கொண்ட இசையும் உண்டு. நாம் இறைத்தன்மை கொண்ட இசையை மட்டும் விரும்ப வேண்டும். பாடல் வரிகளில் அமங்கலங்களைக் கலக்கக் கூடாது. மங்கலமானச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர் பேசினார்.
“கண்ணதாசன் எழுதிய பாடல்களை இலக்கியமாகவே கூறலாம். தற்கால நிலையில் ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழ் வரிகள் கொண்ட திரைப்படப் பாடல்களையும் இலக்கியம் என்று கூறலாம். சில பாடல்களில் மொழிச்சிதைவு உண்டு. மொழிச்சிதைவு உள்ள பாடல்களை நான் இலக்கியம் என்று கூறவில்லை. மங்கலமான சொற்கள் கொண்ட பாடல்கள் அனைத்தும் இலக்கியமே” என்றும் பிறை சூடன் கூறினார்.