ரவாங், மார்ச் 16 – நாட்டையே தனது சத்தியப் பிரமாணங்களாலும், அல்தான்துன்யா மரணம் குறித்த தகவல்களாலும் உலுக்கி எடுத்து, திடீரென்று நேற்று அகால மரணமடைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச் சடங்குகள் இன்று மத்தியானம் அவரது இல்லத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் செராஸ் மின் சுடலையில் அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச் சடங்கில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் துணைவியாரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான வான் அசிசா கலந்து கொண்டு தனது அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொண்டார்.
ரவாங்கிலுள்ள தாமான் பெலாங்கி என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இறுதிச் சடங்குகளில் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, கெளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லோ கோ பர்ன், செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், ஆகியோரும் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
பாலாவின் குடும்பம்
பாலாவிற்கு 43 வயதான செந்தமிழ் செல்வி என்ற மனைவியும், கிஷன் (16 வயது) மேனகா (வயது 14) ரிஷி (வயது 11) என மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர்.
கடந்த மார்ச் 5ஆம் தேதி இருதயக் கோளாறு காரணமாக சுபாங் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலா கடந்த மார்ச் 12ஆம் தேதி மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெற இருந்ததாகவும் கூறப்பட்டது.
சில ஆண்டுகள் குடும்பத்துடன் வெளிநாட்டில் தங்கியிருந்து விட்டு அண்மையில் நாடு திரும்பிய பாலா, தான் செய்த முதல் சத்தியப் பிரமாணம் தான் உண்மையானது என்று பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து அறிவித்திருந்தார்.
அதோடு, நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்து மக்கள் கட்டணிக்காக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி சில கூட்டங்களில் கலந்து கொண்டு பேசவும் செய்தார்.
அல்தான்துன்யாவின் தந்தையார் துக்கம்
பாலாவின் மறைவை அறிந்த அல்தான்துன்யாவின் தந்தை டாக்டர் ஷாரிபு மிகவும் கவலையடைந்ததாகவும், விரைவில் மலேசியா வந்து தனது மகளின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை வெளியிட பாலாவுக்கு உதவ தயாராக இருந்தார் என்றும் பாலாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லோ கோ பர்ன் கூறினார்.
சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா “பாலா மிகவும் தைரியசாலி. இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட போராட்டங்களை நாங்கள் மறக்க மாட்டோம். இறுதிவரை உண்மைக்காக போராடத் தயாராக இருந்த மனிதர் பாலா. அவரது போராட்டம் அவருடைய அகால மரணத்தோடு முடிந்து போய்விடாது” என்று இறுதிச் சடங்குளில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
எல்லாரையும் விட பாலாவின் அகால மரணத்தால் அதிகம் உருக்குலைந்து போனவர் அவரது வழக்கறிஞர் அமெரிக் சிடுதான்.
“நான் கவலையில் இருக்கின்றேன். ஆத்திரப்படுகின்றேன். ஆனால் இந்த மரணத்தோடு எல்லாம் முடிந்து விடாது. எல்லா உண்மைகளையும் வெளிக் கொண்டுவருவதற்கு தேவையான அனைத்தையும் பாலா என்னிடம் தந்திருக்கின்றார். கூடிய விரைவில் எல்லா உண்மைகளும் வெளிவரும்” என்று அமெரிக் சிடு கூறினார்.
இதற்கிடையில் பாலாவின் மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என்று கூறும் பிரேத பரிசோதனைஅறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.