புதுடெல்லி, மார்ச் 16-இத்தாலி கடற்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் (படம்) இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் இந்திய எல்லைக்குள் நடைபெற்றதாக கேரள அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், இச்சம்பவம் சர்வதேச எல்லைக்குள் நடைபெற்றதால் இந்திய அரசு விசாரிக்க உரிமையில்லை என்று இத்தாலி அரசு கூறிவருகிறது.
இந்நிலையில் இரண்டு வீரர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்காகவும், புத்தாண்டு கொண்டாடுவதற்காகவும் இத்தாலி செல்ல இந்தியாவுக்கான இத்தாலி தூதர் முன்மொழிவுடன் இத்தாலி சென்றனர். அங்கு சென்ற அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு பிடிவாதம் பிடித்தது.
இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஐரோப்பிய நாடுகளை அணுகுவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு இத்தாலி வீரர்கள் இந்திய கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவேண்டும். அதுவரை இந்தியாவுக்கான இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்தியாவில் வாழும் இத்தாலியர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க இத்தாலி தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து இத்தாலி தூதரகம் கூறுகையில் ”இத்தாலி வீரர்கள் தொடர்பான போராட்டங்கள் நடைபெறும் இடங்களில், குறிப்பாக கேரளாவில் மக்கள் கூடும் எந்த போராட்டத்தில் இருந்தும் இத்தாலியர்கள் விலகி, விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையோடு இருக்க கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது.