டெல்லி, மார்ச் 16 – கேரளத்தில் மீனவர்கள் இருவரை கொலை செய்த மாலுமிகளை திருப்பி அனுப்ப மறுத்ததால், இத்தாலியுடனான தூதரக ரீதியான உறவை இந்தியா கைவிட முடிவு செய்துள்ளது.
அரபி கடற்பரப்பில் மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் இருவர் கேரளாவில் சிறையில் இருந்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இத்தாலி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களும் இத்தாலி சென்றுவிட்டு மீண்டும் கேரளா திரும்பினர். பின்னர் அந்நாட்டு தேர்தலில் வாக்களிக்க செல்ல இருவருக்கும் அனுமதிக்கப்பட்டது. அப்படிச் சென்ற இருவரையும் திரும்பவும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று அந்நாடு தெரிவித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் எச்சரிக்கை நிலையில் உள்ளன.
இந்நிலையில் இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த் குமார் குப்தாவை இத்தாலியுடன் தூதர் நிலையிலான உறவை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இத்தாலிக்கு தூதரை அனுப்பப் போவதில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது இத்தாலியுடன் தூதரக ரீதியான உறவுகளுக்கு கீழ் நிலையிலான உறவையே மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.