ஜார்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய பங்களா விவகாரத்தில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கையும், அவரது மனைவி பெட்டி சியூவையும் நாளை விசாரணை செய்கிறது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி).
பினாங்கு எம்ஏசிசி அலுவலகத்தில் நாளை அவர்கள் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக என்எஸ்டி இணையதளம் தெரிவித்துள்ளது.
நாளை விசாரணைக்கு, ஊழல் ஒழிப்பு ஆணையமும், லிம்மின் வழக்கறிஞர்களும் கடந்த வாரமே ஒப்புக் கொண்ட பின் தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்ஏசிசி விசாரணைகள் பிரிவின் இயக்குநர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
“நேரமும், இடமும் ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் டவுன், ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் அமைந்துள்ள பினாங்கு எம்ஏசிசி அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் அவர்கள் வாக்குமூலம் அளிப்பார்கள்” என்றும் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.