சென்னை – திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், இந்தியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் மற்றும் இந்திய சட்டங்கள் ஆகியவற்றுக்கு முரணாக இருக்கின்றது என்பதை நேற்றிரவு சுட்டிக் காட்டியுள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், தங்களின் தேர்தல் அறிக்கைகளில் கண்டுள்ள இலவசங்களையும், திட்டங்களையும் எவ்வாறு நிறைவேற்றுவீர்கள், அதற்கான நிதி நிலவரங்கள் என்ன என்பதை இன்று மாலை 5.00 மணிக்குள் விளக்க வேண்டும் என அதிமுக தலைவர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு.கருணாநிதி இருவருக்கும் அதிரடியாக விளக்கம் கோரும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் எடுக்கும் கடுமையான நடவடிக்கை இது என வர்ணிக்கப்படுகின்றது.
இன்று மாலைக்குள் இரண்டு தலைவர்களும் தங்களின் பதில்களை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து இன்றிரவே, அவர்களின் விளக்கங்கள் மீதில் தேர்தல் ஆணையம் பதில் கூறுமா – அல்லது எதிர் நடவடிக்கை எதுவும் எடுக்குமா என்ற பரபரப்பும் இதனால் தமிழகத் தேர்தல் அரங்கில் ஏற்பட்டுள்ளது.
நேற்று மற்றொரு அதிரடி முடிவாக, அரவக் குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் ஆணையம், அந்தத் தேர்தல் எதிர்வரும் மே 25ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.