புதுடெல்லி – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா, பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
இது தவிர மத்திய அமைச்சர்கள் பலரையும் நாதெள்ளா சந்தித்தார். அப்போது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேம்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்தவரான நாதெள்ளா, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமைப் பொறுப்பை கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றார். அதன் பிறகு அவர் இந்தியா வருவது இது 3-ஆவது முறையாகும்.
ஒருநாள் பயணமாக இந்தியா வந்த நாதெள்ளா, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்தனர்.
நாதெள்ளாவுடனான சந்திப்பு பற்றி சுட்டுரையில் பதிவிட்டுள்ள மோடி, “தொலைத்தொடர்புத்துறை குறித்து பல்வேறு விஷயங்களை நாதெள்ளாவுடன் விவாதித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து முழுவிவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் அண்மையில் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், நாதெள்ளாவும் இந்தியாவுக்கு வந்து பிரதமரைச் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களில் பங்கேற்க பல்வேறு, அனைத்துலக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடனான சந்திப்பின் போது நாதெள்ளா இது தொடர்பாக விவாதித்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நாதெள்ளா பேசியதாவது: இந்தியாவில் உள்ள மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் முனைவோர், கலைஞர்கள், பெரிய நிறுவனங்கள், இணையவழி வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி வருகின்றனர்.
இதுதான் என்னை இந்தியாவை நோக்கி அதிகம் ஈர்க்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கம்.
உலகத்தை மாறுபட்ட கோணத்தில் நீங்கள் பார்க்கத் தொடங்கினால், அந்த மாற்றத்தை உலகில் உங்களால் ஏற்படுத்த முடியும் என்றார் நாதெள்ளா.