Home Featured நாடு புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: “எல்லோருக்கும் எளிய தமிழ்” – 30 நாட்களில் 6...

புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: “எல்லோருக்கும் எளிய தமிழ்” – 30 நாட்களில் 6 வயது குழந்தைக்கு தமிழ் கற்பிக்கும் மலேசியாவின் ஆய்வு!

2156
0
SHARE
Ad

சாந்தா கிளாரா (அமெரிக்கா) – கடந்த மே 27 முதல் மே 30 வரை இங்கு உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில், மலேசியாவிலிருந்து படைக்கப்பட்ட ‘எல்லோருக்கும் எளிய தமிழ்’ என்ற கட்டுரை மாநாட்டு பங்கேற்பாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Kasturi Ramalingamஅமெரிக்காவில் நடைபெற்ற ‘புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில்’ கஸ்தூரி இராமலிங்கம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தபோது…

கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன், மாசாய் தமிழ்ப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் ஆகிய இருவரும் ஆய்வின் அடிப்படையில், உருவாக்கிய இந்தக் கட்டுரை 6 வயது முதலான குழந்தைகளுக்கும், தமிழைப் படிப்பவர்களுக்கும் எவ்வாறு தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவது என்றும்,  30 நாட்களுக்குள் அவர்களுக்கு எவ்வாறு அடிப்படை வாசிப்புத் தமிழை அறிமுகப்படுத்தலாம் என்பது குறித்தும் புதுமையான கோணங்களில் சிந்திக்கின்றது.

#TamilSchoolmychoice

இந்தக் கட்டுரை மாநாட்டில் படைக்கப்பட்டபோது, மண்டபம் நிறைந்து பேராளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு செவிமெடுத்தார்கள் என்பதுடன், குறிப்பாக, மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் பேராளர்கள் தங்கள் நாட்டுத் தமிழர்களின் தொலைந்து போன தமிழை மீட்டெடுக்கப் பயன்படும் என்பதால், இந்த ஆய்வுக் கட்டுரையின் மீது ஆர்வம் காட்டினார்கள்.

உற்சாகத்தோடு குழந்தைகள் தமிழ் படிக்கும் ‘எல்லோருக்கும் எளிய தமிழ்’ திட்டம்

Tamil-Easy Tamil for everyநாடெங்கும் உருவாகி வரும் தமிழ் பாலர் பள்ளிகளில் போதிப்பதற்கும், முதலாம் வகுப்புக்கு செல்தற்கு முன்னால் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை அறிமுகப்படுத்துவதற்கும், இந்த ஆய்வுக் கட்டுரை வழிகாட்டுகிறது.

மேலும், ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பும் பெற்றோர்களையும் இந்த ஆய்வுத் திட்ட முறை ஈர்க்கும்.

தமிழ் மொழியை கற்க ‘அ’வில் இருந்து தொடங்கும் வழக்கமான அகர வரிசை பாணியிலிருந்து விலகி, வடிவ எளிமையின் அடிப்படையில் மாணவர்களுக்கு தமிழை அறிமுகப்படுத்துகின்றது இந்த முறை. எனவே, மாணவர்கள் முதலில் தெரிந்து கொள்வது ‘ட’ என்ற எழுத்தை!

பின்னர், அதிலிருந்து ‘ப’, ‘ம’ என தமிழ் எழுத்து வடிவங்கள் கற்பித்தலின்போது விரிவாக்கப்படும்.

மாணவர்களுக்கு எப்படி ஆர்வத்தை ஏற்படுத்துவது?

Tamil-easy tamil-malay boy learningதமிழை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் ஒரு மலாய் மாணவன்….

புதிய மாணவர்கள் இந்த தமிழ் எழுத்துக்களைப் படிப்பதை கடுமையாக்காமல், எளிமையாக்குவதோடு, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்து வகையிலும், பல விளையாட்டுகள் இந்த கற்பித்தல் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை அவர்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் விளையாட்டுகள், சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்துக்களோடு அவர்கள் உறவாடும் வண்ணம், எழுத்துக்களோடு விளையாடி அவற்றுடன் அவர்கள் பரிமாறிக் கொள்ளும் வண்ணம்,  வழி முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, சில பொருட்கள் மற்றும், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தோற்றம் கொண்ட சில பொருட்கள் ஆகியவை கொண்டு, மாணவர்கள் தாங்களாகவே தமிழ் எழுத்துகளை தங்களின் சொந்தக் கரங்களால் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். வண்ணத்தாட்கள், விளையாட்டுக் களிமண், சிறு மரக்கட்டை வடிவங்கள் (wooden blocks), முறுக்கு போன்ற உணவுப் பொருட்களும் இதற்காக பயன்படுத்தப்படும்.

Tamil-Easy Tamil for everyone -Murukkuதமிழில் “முறுக்கு” செய்யும் மாணவன்….

முறுக்கு செய்வது போன்று தமிழ் எழுத்துகளை உருவாக்கும்போது மாணவர்கள் குதூகலத்துடன் கற்றுக் கொள்வதாகவும், அந்த எழுத்துக்களின் வடிவத்தை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வதாகவும், இந்தக் கட்டுரையின் ஆய்வாளர்கள் அனுபவபூர்வமாகக் கண்டுள்ளார்கள்.

“எழுத்து-சொல்-வாக்கியம்” – மூன்று கட்டங்களாக முன்னேற்றம்

இந்தப் பயிற்சித் திட்டத்தின் வழி மாணவர்கள் மூன்று கட்டங்களாக அடுத்தடுத்து கொண்டு செல்லப்படுகின்றார்கள். எழுத்து, சொல், வாக்கியம் ஆகியவையே அந்த மூன்று கட்டங்கள்.

முதலில் எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளும் மாணவர்கள் பின்னர் அந்த எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றார்கள். சொற்கள் பரிச்சயமானவுடன், அந்த சொற்களைக் கொண்டு சிறுசிறு வாக்கியங்களை அமைக்கும்  விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

Kasturi-with students - programmeமுதல் பரிட்சார்த்த பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுடன், அந்தப் பயிற்சியை நடத்திய கஸ்தூரி இராமலிங்கம்…

இந்த திட்டத்தின் முதல் பரிட்சார்த்த வகுப்பில் கலந்து கொண்ட 10 மாணவர்களின் நடவடிக்கைகள் ஒரு பிரத்தியேக முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவை பெற்றோர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆகியோரிடையே மலேசியாவில் மட்டுமின்றி அயல் நாடுகளிலும் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, ஆர்வத்தையும் தூண்டியிருக்கின்றன. பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கும் இந்த முகநூல் வழியான அனுபவப் பதிவுகள் வழிவகுத்துள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு முதலில் தமிழ் மொழியில் எதுவும் தெரியாது. ஆனால், இந்தத் திட்டத்தைப் பின்பற்றிக் கற்றுக் கொண்டவுடன், தமிழைப் பார்க்கும் இடமெல்லாம் – பதாகைகள், விளம்பரப் பலகைகள், திருமணப் பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் – என அந்தக் குழந்தைகள் படிக்கத் தொடங்குகின்றனர்.

முத்து நெடுமாறன் கருத்து

Muthu Nedumaranஇந்த ஆய்வுகள், இதன் மூலம் கிடைத்திருக்கும் விளைவுகள் குறித்து இந்த ஆய்வை இணைந்து நடத்திய முத்து நெடுமாறன் (படம்) கருத்துரைக்கும்போது, “குழந்தைகள் குதூகலமாகவும், உற்சாகத்துடனும் தமிழைக் கற்றுக் கொள்ளும் வழிமுறைகளை, சூழல்களை, ஆராய்ந்து வடிவமைத்து, உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் கிடைத்திருக்கும் விளைவுகள், அனுபவங்கள் குறித்து நாங்கள் மிகவும் திருப்தி கொண்டுள்ளோம். இது ஒரு தொடக்கம்தான்” என்று தெரிவித்திருக்கின்றார்.

“மேலும், குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் தேவைகள் அறிந்து ஒரு முழுமையான தமிழ் கற்பிக்கும் கட்டமைப்பை நாங்கள் வடிவமைத்து உருவாக்கியுள்ளோம். எங்களின் அடுத்த கட்ட முயற்சி இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பத்தை மெல்ல மெல்ல உட்புகுத்துவதும் அதன் மூலம், அனைத்துலக அளவிலும், இணையத் தளங்களிலும், நட்பு ஊடகங்களிலும் (social media) இதனை விரிவாகப் பரப்புவதுதான்” என்றும் முத்து நெடுமாறன் மேலும் கூறியுள்ளார்.

கஸ்தூரி இராமலிங்கத்தின் அனுபவக் கருத்து

Kasturi Ramalingam“எல்லோருக்கும் எளிய தமிழ்” ஆய்வுக் கட்டுரையை “புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் சமர்ப்பித்த இணை ஆய்வாளர் கஸ்தூரி இராமலிங்கம்தான் (படம்), இந்தத் திட்டத்தின் முதல் பரிட்சார்த்த வகுப்பை 10 குழந்தைகளைக் கொண்டு நடத்தியவராவார்.

“எனது பயிற்சி வகுப்பின் போது, எங்களின் பாடத்திட்ட வழிமுறைகளினால், மாணவர்களிடையே மிகப் பெரிய அளவிலான ஆர்வமும், உற்சாகமும் ஏற்பட்டது. ஒரு வகுப்பைக் கூட எந்த ஒரு மாணவனும் தவற விட்டதில்லை. ஒரு குழந்தைக்கு மொழி என்பது மிகவும் அடிப்படைத் தேவையாகும். இந்த மொழியைக் கொண்டுதான், போதிக்கப்படும் மற்ற பாடங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, தமிழ்ப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது பொருந்தும். தாங்கள் படிக்கப் போகும் மொழியில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதும், அதன் மூலம் அந்த மொழியைக் கொண்டு அவர்கள் அனைத்தையும் உற்சாகத்தோடு தொடர்ந்து கற்றுக் கொள்வதும் முக்கியமாகும். எனது பரிட்சார்த்த பயிற்சித் திட்டத்தின் மூலம் கிடைத்திருக்கும் விளைவுகள் – நான் பெற்றிருக்கும் அனுவங்கள் ஆகியவை குறித்து நான் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொள்கின்றேன்” என்றும் கஸ்தூரி மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil-Easy tamil-kasturi with studentsபயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுடன் ஆசிரியர்கள்…

இந்தப் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கு அனுமதியும் வாய்ப்பும் அளித்து, அதற்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய மாசாய் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி பெரியாச்சி பெருமாள் அவர்களுக்கும், மாசாய் தமிழ்ப்பள்ளி ஊழியர்களுக்கும் தனது நன்றியையும் கஸ்தூரி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தப் பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து, தனியார் பன்மொழி பாலர் பள்ளியான தாடிகா வர்ணா வர்ணி இண்டர்லெக் என்ற பள்ளியும் இந்த பயிற்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, தங்கள் பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களுக்குப் போதிக்க முன்வந்துள்ளது, குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

“எல்லோருக்கும் எளிய தமிழ்” என்ற இந்தப் பயிற்சித் திட்டத்தின் கூடுதல் விவரங்களையும், தகவல்களையும் கீழ்க்காணும் முகநூல் இணைப்பில் காணலாம்:

http://fb.com/EasyTamilForEverybody

  • செல்லியல் தொகுப்பு

பின்குறிப்பு : புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் முனைவர் முல்லை இராமையா படைத்த ஒலிவழி தமிழ் கற்பித்தல் முறை குறித்த கட்டுரையின் முக்கிய அம்சங்களை கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம்.

அமெரிக்காவில் நடந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: முல்லை இராமையாவின் ‘ஒலிவழி’ தமிழ் கற்றல் வழிமுறைகள்!