சேலம் – பேஸ்புக்கில் தனது ஆபாசப் படம் வெளியானதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் வினுப்பிரியாவின் மார்ஃபிங் படம் பரப்பப்பட்டது தொடர்பில், சுரேஷ் என்பவரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
சுரேஷ் அளித்த தகவலின் பேரில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, பேஸ்புக்கில் வினுப்பிரியாவின் படம் முதல் முறையாக வெளியான போதே, அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், மார்ஃபிங் படத்தை பேஸ்புக்கில் இருந்து அழிக்க 20 நாளாகும் என்று அவர்களை காவல்துறை அலைக்கழித்துள்ளது.
அதனை அறிந்த சேலம் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங், நேற்று முன்தினம் வினுப்பிரியாவின் பெற்றோரிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன் படி, வினுப்பிரியாவின் பெற்றோரிடம் 2000 ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பெற்றுக் கொண்ட சுரேஷ்குமார் என்ற சைபர் கிரைம் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தனிநபர்களின் பொறுப்பற்ற செயல், பெற்றோரின் சந்தேகம், காவல்துறையின் அலட்சியம் இம்மூன்றும் சேர்ந்து வினுப்பிரியா என்ற இளம் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.