சென்னை -உலகமெங்கும் மாறி வரும் தட்பவெட்ப நிலை காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது பறவை இனம் தான்.
நகரமயமாக்கலின் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டு, கட்டிடக் குவியல்களாக மாறி வரும் நிலையில், அங்கு வாழும் பறவையினங்கள் குடிக்கத் தண்ணீர் இன்றி பல மைல்கள் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
அவற்றில் காகம், புறா, கிளி போன்ற சில வகை பறவைகள் காலங்காலமாக மனிதர்களோடு நெருக்கமாக வாழ்ந்து வருவதால், நகரங்களில் மனிதர்களோடு மனிதர்களாக தற்போது பயணிம் செய்யவும் தொடங்கிவிட்டன.
இப்படித் தான் அண்மையில், தமிழ்நாட்டில் புறா ஒன்று பேருந்தில் பயணம் செய்யத் துணிந்து நடத்துனருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் எல்லவாடி செல்லும் பேருந்து இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பயணம் செய்திருக்கிறது புறா ஒன்று.
அதன் அருகில் அமர்ந்திருந்த ஆசாமியோ முழு போதையில் இருந்திருக்கிறார். எங்கே தன் மீது வாந்தி எடுத்துத் தொலைத்துவிடுவாரோ? என்ற பயத்தில் மற்ற பயணிகள் யாரும் அந்த இருக்கையில் அமராமல், புறாவை அப்படியே விட்டுவிட்டனர்.
புறாவும் யாரும் தன்னை விரட்டவில்லை என்ற தைரியத்தில், போதை ஆசாமியின் சொந்தக் கதைகளைக் கேட்டுக் கொண்டே பயணம் செய்திருக்கிறது.
பேருந்து போய்க் கொண்டிருக்கையில் ஒரு நிறுத்தத்தில் போக்குவரத்து இலாகாவின் சோதனை அதிகாரிகள் பேருந்தில் ஏறியிருக்கின்றனர். நடத்துனரிடம் பேருந்தில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு சரிபார்த்திருக்கின்றனர்.
அப்போது புறாவைக் கண்ட அவர்கள், புறாவுக்கு ஏன் டிக்கெட் போடவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். நடத்துனரோ பணிக்கு புதிது போல் தெரிகின்றது. “என்னது புறாவுக்கு டிக்கெட்டா?” என்று எதிர் கேள்வி எழுப்பி எகிறியிருக்கிறார்.
‘ஓ அப்படியா..’ என்று யோசித்த அதிகாரிகள், புறாவுக்கு டிக்கெட் போடவில்லை என்று கூறி நடத்துனருக்கு அபராதம் விதித்துவிட்டு இறங்கிச் சென்றிருக்கின்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்து இலாகாவின் சட்டப்படி, பயணி ஒருவர் ஒரே நேரத்தில் 30 புறாக்களைக் கொண்டு வந்தால், அவரிடம் கட்டணமாக முழுக்கட்டணத் தொகையில் நான்கில் ஒரு பங்கைப் பெற வேண்டும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகின்றது.
ஆனால், பயணி ஒரே ஒரு புறாவுடன் வந்தால், அக்கட்டணம் தேவையில்லை என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு போக்குவரத்து இலாகாவில் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: