(செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய அமரர் எம்ஜிஆர் குறித்த இந்தக் கட்டுரை மலேசியாவில் கடந்த 10 செப்டம்பர் 2017-இல் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இடம் பெற்றது)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1987-இல் மறைந்தபோது, அடுத்து வரும் பத்தாண்டுகளில் அல்லது இருபது ஆண்டுகளில் அவரது புகழும், செல்வாக்கும் தமிழக மக்களிடையேயும், சினிமா இரசிகர்களிடையேயும், மெல்ல மெல்ல மங்கி, ஒரு காலகட்டத்தில், அவர் மறக்கப்பட்டு விடுவார் என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவரது புகழ் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, நீடித்து நிலைத்திருப்பதற்கும், தொடர்வதற்கும் என்ன காரணம் என பல தருணங்களில் நான் சிந்தித்ததுண்டு.
கீழ்க்காணும் மூன்று முக்கிய அம்சங்கள் காரணமாக அவரது புகழ் இன்றும் தொடர்ந்திருக்கிறது – நிலைத்திருக்கிறது – என்பது எனது சிந்தனையின் முடிவு:
- தமிழக அரசியலில் தொடர்ந்து அதிமுக கட்சி ஜெயலலிதாவின் ஆளுமையாலும், திறனாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முக்கிய மாற்று அரசியல் சக்தியாகவும் திகழ்ந்ததால், அவர்களால் எம்ஜிஆரின் புகழை ஒரு வாக்கு வங்கியாக மாற்றி மக்களிடையே அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்ய முடிந்தது.
- இரண்டாவதாக, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் விஸ்வரூபமெடுத்து இல்லம்தோறும் இன்று பரவிக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் எம்ஜிஆரின் புகழ் நிலைத்திருப்பதற்கு இன்னொரு காரணமாகும். தனது சொந்தத் திரைப்படத் தயாரிப்புகளைக் கூட தொலைக்காட்சிகளுக்கு உரிமம் கொடுக்காமல் பாதுகாத்தவர் எம்ஜிஆர். ஆனால், நாளடைவில், அவரது திரைப்படங்களும், காட்சிகளும், குறிப்பாகப் பாடல் காட்சிகளும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளியேறி வர இதன் மூலம் அவர் காலத்து இரசிகர்கள் அவரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாட முடிந்தது என்பதோடு, அடுத்த தலைமுறையின் புதிய, இளம் இரசிகர்களும் அவரது இரசிகர்களாக இணைந்தார்கள். எம்ஜிஆரின் தீவிர இரசிகர்கள் பலர் அடிக்கடி எம்ஜிஆர் படங்களை தொலைக்காட்சிகளில் பார்க்க, அவர்களோடு அந்தப் படங்களைப் பார்த்த அவர்களின் பிள்ளைகளும் எம்ஜிஆரை இரசிக்கத் தொடங்கினார்கள் என பல குடும்பங்களில் நானே சொல்லக் கேட்டிருக்கிறேன். இது மற்ற எந்த நடிகருக்கும் நேராத அதிசயம்.
- மூன்றாவதாக எம்ஜிஆர் மிகவும் கவனமுடன் கடைப்பிடித்த ‘இமேஜ்’ எனப்படும் அவரது வெளித்தோற்ற நடவடிக்கைகள், மனித நேயத்தை மையமாகக் கொண்டு அவர் கடைப்பிடித்த பொது உறவுப் பண்பாடுகள் இன்றுவரை பலராலும் பெருமிதத்துடனும், ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருவதால், அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டு, எம்ஜிஆர் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா, எம்ஜிஆர் அவ்வளவு நல்லவரா என இன்றைய மக்களும் அதிசயப்படும் வண்ணம் அவரது புகழ் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆரின் மனித நேய பொது உறவு
மேற்கூறிய மூன்றாவது அம்சத்தை மையமாகக் கொண்டதுதான் இந்தக் கட்டுரை.
எம்ஜிஆரைப் பொறுத்தவரை என்னை மட்டுமின்றி பலரையும் இன்றுவரை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு கூட்டத்தினரிடையேயும், கோடிக்கணக்கான மக்களிடத்திலும் அவர் தனது தோற்றத்தையும், தனது பிம்பத்தையும் பாதுகாத்து வந்த அதே நேரத்தில் மிகச் சாதாரண தனி மனிதர்களிடத்திலும் சரிசமமாக அவர்களுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டார் என்பதுதான்.
அவரது மனித நேய பொது உறவுப் பண்பாடுகளில், உணவு ஒரு முக்கிய அங்கம் வகித்தது என்பது ஆராய்ச்சிக்குரிய மற்றொரு விஷயம். இளம் வயதில் அவர் சந்தித்த பட்டினி, வறுமை போன்றவை இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். உணவு விஷயங்களில் அவர் கடைப்பிடித்த பண்பாடு, அணுகுமுறையினாலேயே அவர் பலரால் கவரப்பட்டிருக்கிறார்.
சில சம்பவங்களின் மூலம் எம்ஜிஆரின் இந்தப் பண்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த சம்பவங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளில் நானே நேரடியாகக் கேட்டவையும், படித்தவையும் ஆகும்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் அவரது வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பாயசம் நன்றாக இருந்தது என்று கூறிக் கொண்டிருந்ததை யதேச்சயாகக் கேட்டிருக்கிறார் எம்ஜிஆர். சில நாட்கள் கழித்து
அதே போன்ற பாயசம் எம்ஜிஆர் வீட்டில் தயாரிக்கப்பட்டபோது, உடனே எம்ஜிஆர் தனது உதவியாளரை அழைத்து கீழே இருக்கும் அந்தக் குறிப்பிட்ட காவல் துறை அதிகாரிக்கும் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். திரும்பி வந்த உதவியாளர், அந்தக் காவல் துறை அதிகாரி தற்போது நம் வீட்டில் பணியில் இல்லை, அவரது காவல் நிலையத்திற்கே (போலீஸ் ஸ்டேஷன்) மாற்றலாகி விட்டார் என்று கூறியிருக்கிறார்.
உடனே தனது உதவியாளரிடம், இந்தப் பாயசத்தை அந்தக் காவல்துறை அதிகாரி இருக்கும் ஸ்டேஷனுக்கே சென்று கொடுத்து விட்டு வாருங்கள் என எம்ஜிஆர் கட்டளையிட்டிருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரி ஆடிப் போய் விட்டாராம். எம்ஜிஆருக்கு என்னைப் போன்ற சாதாரண மனிதனிடத்திலும் இத்தனை கரிசனமா என நெகிழ்ந்து விட்டாராம்.
புலமைப் பித்தனுக்கு கொடுக்கப்படாத மதிய உணவு
எம்ஜிஆரின் பல படங்களுக்கு அற்புதமான பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப் பித்தன் (படம்). ஒருமுறை மதிய வேளையில் ஒரு பாடலை எழுதிக் கொண்டு எம்ஜிஆரைப் பார்க்க ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார். அப்போது வெளியே இருந்தவர்கள், அவர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூற “பரவாயில்லை. நான் வெளியே காத்திருக்கிறேன்” என புலமைப் பித்தனும் கூறிவிட்டுக் காத்திருந்திருந்தார்.
எம்ஜிஆர் சாப்பிட்டு முடிந்ததும் புலமைப் பித்தன் காத்திருப்பதாகக் கூற, அவரை உள்ளே அழைத்தவர் “எப்போது வந்தீர்கள்?” எனக் கேட்டிருக்கிறார். “நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே வந்து விட்டேன்” என்று கூற எம்ஜிஆருக்கு முகமெல்லாம் சிவந்து விட்டதாம்.
உதவியாளர்களைக் கடுமையாகத் திட்டியவர் “நாமெல்லாம் இந்த ஒரு வேளை சாப்பாட்டுக்குத்தானே உழைக்கிறோம். உங்களை வெளியே அமரவைத்து விட்டு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறேனே” என புலமைப் பித்தனிடம் திரும்பத் திரும்பக் கூறி கண்கலங்கினாராம் எம்ஜிஆர்.
“பரவாயில்லை அண்ணே!” என புலமைப் பித்தன் அவரைச் சமாதானப்படுத்தினாராம்.
ஏவி.எம்.சரவணனுக்குத் தாமதமாக வந்த சைவ உணவு
எம்ஜிஆர் முதல்வராக இருந்த சமயம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் தனது நிர்வாகக் குழுவினரோடு எம்ஜிஆரைப் பார்க்க விரும்ப, ஏவி.எம்.சரவணனிடம் (படம்) ஒரு நாளைக் குறிப்பிட்டு, அனைவரும் வாருங்கள் என்னோடு மதிய உணவு அருந்தலாம் என்று அழைத்திருக்கிறார் எம்ஜிஆர்.
அனைவரையும் வரவேற்ற எம்ஜிஆர் அவர்களோடு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். மதிய உணவுக்கான நேரம் கடந்தும் சாப்பிட அழைக்காமல் எம்ஜிஆர் பேசிக் கொண்டே இருக்க, வந்தவர்களுக்கோ பசி ஒருபுறம் – எம்ஜிஆரிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கம் ஒரு புறம்.
பின்னர் ஒருவழியாக, அனைவரையும் சாப்பிட அழைத்த எம்ஜிஆர், “ஏன் இவ்வளவு நேரம் உங்களையெல்லாம் தாமதப்படுத்தினேன் தெரியுமா? உங்களுக்கெல்லாம் அசைவ உணவு சிறப்பாகத் தயாரிக்கச் சொன்னேன். ஆனால், நீங்கள் வந்தவுடன்தான் சரவணன் சைவம் மட்டுமே சாப்பிடுபவர் என்பது எனது நினைவுக்கு வந்தது. உடனே, சரவணனுக்குத் தனியாக சைவ உணவு தயாரித்து முடித்ததும் உங்களையெல்லாம் அழைத்தேன். அதனால்தான் தாமதம்” என்று கூறியிருக்கிறார்.
ஒரு நபர்தானே சைவம், ஏதாவது அவரைச் சாப்பிடச் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணாமல், அவருக்கும் தனியாக சைவ உணவு சமைக்கச் சொல்லி, அது தயாரானதும்தான் அனைவரையும் அழைத்திருக்கிறார் எம்ஜிஆர். இதுபோன்ற மனித நேய அணுகுமுறைதான், அவரைப் பற்றி இன்றும் மக்கள் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவரது புகழை நிலைத்திருக்கச் செய்திருக்கிறது.
வீட்டில் எந்நேரமும் சாப்பாடு
கோலாலம்பூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திறந்து வைக்கப்பட்ட எம்ஜிஆரின் முழு உருவச்சிலை
இதுபோல எத்தனையோ சம்பவங்களை எம்ஜிஆர் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் எல்லாம் அவரது மனித நேய பண்பாடுகளையும், உணவுக்கு அவர் தந்த முக்கியத்துவத்தையும் நாம் காணலாம்.
நமக்கு ஆச்சரியத்தைத் தருவது என்னவென்றால், அவருக்கிருந்த புகழுக்கும், ஆளுமைக்கும், உயர்ந்த நிலைமைக்கும், எந்த ஒரு சாதாரண மனிதனையும் வசீகரிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை. இருப்பினும் அவர் அவ்வாறு நடந்து கொண்டார். அதனால்தான் இன்றுவரை அவரது புகழ் வாய்மொழியாக பலராலும் பகிரப்பட்டு, அடுக்கடுக்கான படிமங்களாக அவரது பெயரை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது.
உணவு என்று சொல்லும்போது, யார் அவர் வீட்டுக்குச் சென்றாலும், அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஏதாவது சாப்பாடு கிடைக்கும் என்பதை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர் தொடக்கிய பள்ளிக்குழந்தைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம்தான், மேற்கூறப்பட்டது போன்ற எத்தனையோ சம்பவங்களுக்கு முத்தாய்ப்பாக, தலையானதாகத் திகழ்ந்தது.
இந்தத் திட்டம்தான் இன்றுவரை அவரது நிலைத்த புகழுக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. அவரது புகழும் செல்வாக்கும் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
அவர் மரணிக்கும் தருவாயில் பள்ளிக் குழந்தையாக இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச உணவுதான், அந்தக் குழந்தைகள் வளர்ந்து இன்று பெரியவர்களாகியும் அவர் மீதான அபிமானத்தை அவர்களிடையே சற்றும் குறைக்காமல் அப்படியே வைத்திருக்கிறது என்பதும் நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம்!