கோலாலம்பூர் – மஇகாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் பொருளாதாரம், அரசியல், வணிகம், வங்கித் தொழில், பல்கலைக் கழகப் பணிகள், எனப் பன்முகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கியவருமான டான்ஸ்ரீ டத்தோ கே.எஸ்.நிஜார், தனது சுய வரலாற்றை நூலாக வெளியிட்டுள்ளார்.
அவருடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை அவர் கூற, அவரது மகள் பிரமிதா நிஜார் தொகுத்து எழுதியுள்ள இந்த ஆங்கில நூலுக்கு “மாட்டு வண்டிப் பையன்” (The Bullock Cart Boy) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மலேசியாவின் முன்னணி பதிப்பகமும், நூல் விற்பனை நிலையமுமான எம்பிஎச் (MPH) இந்த நூலை வெளியிட்டுள்ளது.
தனது முதல் நூலை சாமிவேலுவிடம் வழங்குகிறார் நிஜார். அருகில் அவரது மனைவி மொலினா நிஜார்…
நூல் வெளியீட்டு விழா,நேற்று சனிக்கிழமை மாலையில், கோலாலம்பூரிலுள்ள மெஜஸ்டிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
ஜூலை 2ஆம் தேதி நிஜாரின் 80வது பிறந்த நாளும் கூட என்பதால், அவரது 80வது பிறந்த நாளும் நேற்று நூல் வெளியீட்டை முன்னிட்டு கொண்டாடப்பட்டது.
தனது முதல் நூலை மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவிடம் வழங்கிய நிஜார், அரசியலிலும், பொதுவாழ்விலும் தனது வளர்ச்சிக்கும், தான் வகித்த பதவிகளுக்கும், ஆசானாகத் திகழ்ந்தவர் சாமிவேலு எனப் புகழாரம் சூட்டினார். நாற்பதாண்டு கால நட்பு எங்களுடையது எனவும் நிஜார் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஒரு சீக்கிய – பஞ்சாபியரான தான் – தமிழ் தெரியாத நிலையில் – தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மஇகாவில் சேவையாற்றவும், அரசியலில் தீவிரமாக ஈடுபடவும் வழியமைத்துக் கொடுத்தவர் சாமிவேலு என்றும் அதன் காரணமாகத்தான், தான் பல உயர்ந்த பதவிகளை கட்சியிலும், அரசாங்கத்திலும் வகிக்க முடிந்தது என்றும் நிஜார் தனது உரையில் கூறினார்.
நிஜாரிடம் இருந்து நூல் பெறும் டாக்டர் சுப்ரா…
முதல் நூலைப் பெற்றுக் கொண்டு சுருக்கமாகப் பேசிய சாமிவேலு, தன்னிடம் பணியாற்றிய காலத்தில், தனது நட்புக்கு மரியாதை கொடுத்து, தான் சொன்னதை மறுக்காமல் செயல்படுத்திக் காட்டியவர் நிஜார் எனக் கூறினார்.
இரண்டாவது நூலை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்திடம் வழங்கிய நிஜார், தனக்கு 80 வயதாகிவிட்டதாகவும், அதன் காரணமாக அடிக்கடி, உடம்பு வலி, எலும்புகளில் வலி ஏற்படுவதாகவும், எனவே, சுகாதார அமைச்சர் என்ற முறையில் சுப்ராதான் தன்னை இனி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
நூல் வெளியீட்டு விழாவின் இடையே தலைவர்களின் கலந்தாலோசனை – இடமிருந்து டத்தோ டி.மோகன், டத்தோ சரவணன், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், டாக்டர் சுப்ரா…
விழா மேடையில் நினைவுக்காக ஒரு படம் – இடமிருந்து டத்தோஸ்ரீ தேவமணி, டான்ஸ்ரீ வீரசிங்கம், டத்தோ டி.மோகன், டாக்டர் சுப்ரா, நிஜார், சரவணன், டத்தோஸ்ரீ வேள்பாரி,டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்…
நிஜாரின் நூல் வெளியீட்டு விழாவில் மஇகாவின் தலைவர்கள் பலரும், பிரமுகர்களும், நிஜாரின் குடும்பத்தினர், மற்றும் குடும்ப நண்பர்களும் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டுக்கு முன்பாக, நிஜாரின் நூலின் பின்னணியையும், அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை அவரே நேரடியாக விவரிக்கும் 22 நிமிட காணொளி திரையிடப்பட்டது.
நூல் வெளியீட்டு விழாவில் நிஜார்….
சாதாரண பின்புலத்தில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் ஒரு மாட்டு வண்டியில் பிறந்த நிஜார் அதன் காரணமாக, தனது தாயாரும், தனது குடும்பத்தினரும் தன்னை சிறுவயது முதல் ‘மாட்டு வண்டிப் பையன்’ என்றே அழைத்தனர் என்றும் அதன் காரணமாகவே, தனது சுயசரிதைக்கு அந்தப் பெயரையே சூட்டியதாகவும் தெரிவித்தார்.
9 வயது வரை தனக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்றும் அதன்பின்னரே தனது தந்தை தன்னை பள்ளிக்கு அனுப்பினார் என்ற அதிர்ச்சியான தகவலையும், தான் வழங்கிய காணொளியில் நிஜார் தெரிவித்தார்.
இளவயது முதல் நிஜார் பேராக் மாநிலத்தின் குரோ வட்டாரத்தில் வாழ்ந்ததையும், வளர்ந்ததையும், பின்னர் கல்வியின் வழி உலகின் பல முன்னணி பல்கலைக் கழகங்களில் படித்து முன்னேறியதையும், அவரது வாழ்க்கையின் முக்கிய, சுவாரசியமான சம்பவங்களையும், அனுபவங்களையும் இந்த நூல் விவரிக்கின்றது.
இந்த நூல் எல்லா எம்பிஎச் நூல் விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.
-செல்லியல் தொகுப்பு