Home நாடு “மஇகாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவரை இழந்தோம்” – நிஜார் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல்

“மஇகாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவரை இழந்தோம்” – நிஜார் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல்

583
0
SHARE
Ad

டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜார் மறைவை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி

மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியிலும், கட்சியின் வழி அரசாங்கத்திலும் பல பதவிகளும் வகித்த டான்ஸ்ரீ நிஜார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

கடந்த காலங்களில் அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையிலும் கட்சிக்கு அவர் ஆற்றிய பல பணிகளை நன்கு அறிந்தவன் என்ற முறையிலும் அவரின் இழப்பு மஇகாவுக்கும் இந்திய சமூகத்திற்கும் பேரிழப்பு எனக் கருதுகிறேன்.

பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்ற நிஜார் வங்கித் தொழில், வணிகம் என பல வாய்ப்புகள் இருந்தும் மஇகாவில் தீவிரமாக ஆர்வத்துடன் இயங்கினார். பொதுவாக வட இந்தியர்கள் மஇகாவில் ஆர்வம் காட்டுவது குறைவாக இருந்த காலகட்டத்தில், நேரடி மஇகா அரசியலில்  இறங்கி களப்பணியாற்றியவர் நிஜார்.

#TamilSchoolmychoice

அப்போதைய தேசியத் தலைவர் துன் சாமிவேலுவுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர் மூலம் பல பதவிகள் பெற்றாலும், வெறும் நியமனப் பதவிகள் மூலம் அரசியலில் வலம்வர விரும்பாமல், மத்திய செயற்குழு, தேசிய உதவித் தலைவர் போன்ற பதவிகளுக்குப் போட்டியிட்டுப் பேராளர்களிடையே பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற சாதனைகளைப் புரிந்தவர் நிஜார்.

ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர், மத்திய செயலவை உறுப்பினர், தேசிய உதவித் தலைவர், தேசியப் பொருளாளர், எனப் பல பதவிகளை மஇகாவில் வகித்த அவர், அரசாங்கத்திலும், செனட்டர், அனைத்துலக, வாணிப தொழில் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர், சுபாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர்.

தேசியப் பேராளர் மாநாடுகளில் கலந்து கொண்டு இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பல கருத்துகளை வழங்கியவர் நிஜார்.

மிகச் சாதாரண, ஏழ்மையான குடும்பத்தில் ஒருவராகப் பிறந்து கல்வியின் மூலம் உயர்ந்த வளர்ச்சியடைந்த நிஜார் தனது வாழ்க்கையின் சுவாரசியமானப் பக்கங்களை ஆங்கிலத்தில் நூல் வடிவில் எழுதி வெளியிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் “மாட்டுவண்டிப் பையன்” என்ற பொருளிலான “The Bullock Cart boy” என்ற ஆங்கில நூலை வெளியிட்ட நிஜார் அதில் கல்வியின் மூலம் எப்படி தன்னால் உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது என்பதை விவரித்திருந்தார். வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு பல அறிவுரைகளையும அந்த நூலில் நிஜார் வழங்கியிருந்தார்.

வணிகத் துறையிலும் ஈடுபட்டு வெற்றிகரமான வணிகராக அவர் உயர்ந்தார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மஇகாவின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.