Home Photo News டான்ஸ்ரீ நிஜார் : சில நினைவுகள் – சில தகவல்கள்!

டான்ஸ்ரீ நிஜார் : சில நினைவுகள் – சில தகவல்கள்!

879
0
SHARE
Ad
சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் “மாட்டுவண்டிப் பையன்” என்ற பொருளிலான “The Bullock Cart boy” என்ற ஆங்கில நூலை வெளியிட்டார் நிஜார்

(கடந்த ஜூன் 15-ஆம் தேதி தனது 84-வது வயதில் காலமான டான்ஸ்ரீ கே.எஸ். நிஜார் குறித்த சில நினைவுகளையும் சுவையான தகவல்களையும், பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

ஒருமுறை டான்ஸ்ரீ நிஜாரைச் சந்திக்க மாலையில் அவரின் அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது. எனக்கு தேநீர் வழங்கப்பட்டபோது நிஜாருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. உற்றுப் பார்த்தபோது அது வழக்கமாக எல்லோரும் அருந்தும் தேநீர் அல்ல என்பது புரிந்தது.

டீ பேக் எனப்படும் தேநீர்ப் பையுடன் வெந்நீரை ஊற்றி ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் வைத்து சீனி, பால் என எதுவும் கலக்கப்படாமல் அவருக்கு வழங்கப்பட்டது. கூடவே ஜேக்கப் பிஸ்கட் எனப்படும் சீனி கலவாத இரண்டே இரண்டு பிஸ்கட்டுகள்.

“இப்படித்தான் நான் தேநீர் அருந்துவேன்” என்றார் நிஜார்.

#TamilSchoolmychoice

அவர் பொது நிகழ்ச்சிகளில் திடகாத்திரமாக உலா வந்த காலம் வரை அவரின் உடல் அளவு பெருக்காமல் ஒரே சீராக பல ஆண்டு காலமாக இருந்து வந்ததற்கான காரணம் அவரின் அத்தகைய, தேநீர் அருந்து பழக்கமும் ஒன்றாக இருந்திருக்கலாம்.

வழக்கமாக சீக்கிய சகோதரர்கள் அவர்களின் உணவுப் பழக்கத்தால் உடல் பருமனாகவே இருப்பார்கள். நிஜார் அதற்கு விதிவிலக்கு!

இளம் வயதுக்காரர் போல குர்தா பைஜாமாவில் பஞ்சாபி பாணி உடையில் ‘சிக்’கென உடல் வாகுடன் அவரைப் பொது நிகழ்ச்சிகளில் பார்க்கலாம்.

மஇகாவில் பல பதவிகள் வகித்தவர்

மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர், செனட்டர், நாடாளுமன்றச் செயலாளர் என மஇகாவிலும், அரசாங்கத்திலும் பல பொறுப்புகள் வகித்தவர் நிஜார்.

முழுப் பெயர் கர்னாயில் சிங் நிஜார்.

மஇகா தேசியப் பேராளர் மாநாடுகளில் கலந்து கொண்டவர்கள் நிஜாரை எளிதில் மறந்து விட முடியாது.

நிஜாருக்குத் தமிழ் மொழி தெரியாது என்றாலும், பல மஇகா பேராளர்களுடன் எளிய ஆங்கிலத்தில் உரையாடி அவர்களுடன் நெருக்கமாகி விடுவார். தனது உயர் கல்வித் தகுதிகளை அவர்களிடம் காட்டிக் கொள்ள மாட்டார்.

தலைமைப் பொருளாளராக மஇகாவில் பதவி வகித்தபோது பஞ்சாபி பாணி உடையலங்காரத்தோடு மஇகாவின் கணக்கறிக்கையை சில தமிழ் வார்த்தைகளோடு அவர் சமர்ப்பிப்பார்.

1980-ஆம் ஆண்டுகளில் மஇகா தேசியப் பேராளர் மாநாடுகளில் சாதாரண பேராளராக கலந்து கொண்டு இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பல கருத்துகளை வழங்கியவர் நிஜார்.

பின்னர் துன் சாமிவேலு தேசியத் தலைவரான பின்னர் அவர் நிஜாருக்கு பல வாய்ப்புகளை அரசியல் ரீதியாக வழங்கினார்.

ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர், மத்திய செயலவை உறுப்பினர், தேசிய உதவித் தலைவர், தேசியப் பொருளாளர், எனப் பல பதவிகளை மஇகாவில் வகித்தார்.

அரசாங்கத்திலும், செனட்டர், அனைத்துலக, வாணிப தொழில் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர், சுபாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர்.

மஇகாவில் ஈடுபாடு காட்டிய சீக்கியத் தலைவர்

மஇகா வரலாற்றில் 1947-ஆம் ஆண்டில் கட்சியின் இரண்டாவது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்தார் பூத் சிங். இவர்தான் மஇகா அரசியலில் தீவிரம் காட்டிய முதல் சீக்கியத் தலைவர்.

அதன் பின்னர், 1969-இல் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மகிமா சிங், மஇகா வரலாற்றில் மற்றொரு முக்கியத் தலைவர். மகிமா சிங்கிற்குப் பிறகு பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே வட இந்தியர் – சீக்கியர் நிஜார்தான்!

பொதுவாக வட இந்தியர்கள் மஇகாவில் ஆர்வம் காட்டுவது குறைவுதான். சாமிவேலு தேசியத்தலைவராக இருந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்தாலும் நியமனப் பதவிகள் மூலமாக மட்டுமே நிஜார் அரசியல் நடத்தியதில்லை.

1997-ஆம் ஆண்டில் நிஜாருக்கு டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அந்த ஆண்டே அவரை மஇகாவின் தலைமைச் செயலாளராக நியமித்தார் சாமிவேலு. மஇகா வரலாற்றில் பெரும்பாலான கடிதப் போக்குவரத்துகள், சந்திப்புகள் தமிழிலேயே நடத்தப்பட்டு வந்த வேளையில் மஇகா தலைமையக அதிகாரிகளின் உதவியோடு, நிஜார் தலைமைச் செயலாளராக, திறம்படவே செயலாற்றினார்.

அவரின் தனித்தன்மை, மத்திய செயலவை உறுப்பினர், தேசிய உதவித் தலைவர் போன்ற பதவிகளுக்குப் போட்டியிட்டு 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தமிழர் பேராளர்களுடன் கலந்துரையாடி, பழகி அவர்களின் ஆதரவைப் பெற்று தேர்தல் களத்தில் வெற்றி பெற்றதுதான்!

சாமிவேலுவின் ஆதரவாளர் – நெருக்கமானவர் என்பது நிஜாரின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தாலும், அதையே நம்பியிராமல் அவரே நேரடியாகக் களத்தில் இறங்கி ஒவ்வொரு பேராளராகச் சந்தித்து வாக்குகள் கேட்பார்.

அவர் மஇகா தேர்தல்களில் வெற்றியடைந்ததற்கும் அதுவே முக்கியக் காரணமாக அமைந்தது.

1973-ஆம் ஆண்டில் மஇகாவில் சாதாரண உறுப்பினராக இணைந்த நிஜார், தலைமைச் செயலாளராக 4 ஆண்டுகள், தலைமைப் பொருளாளராக 9 ஆண்டுகள், உதவித் தலைவராக 9 ஆண்டுகள் என நீண்டதொரு வரலாற்றைக் கட்சிப் பயணத்தில் பதிவு செய்தவர்.

உதவித் தலைவராக முதன் முதலாக 2000-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2003, 2006-ஆம் ஆண்டு கட்சித் தேர்தல்களிலும் தனது பதவியைத் தற்காத்துக் கொண்டார்.

செனட்டராகவும் நியமிக்கப்பட்ட அவர் 1989 முதல் 1991 வரை அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

1999-ஆம் ஆண்டிலும், 2004ஆம் ஆண்டிலும் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008 பொதுத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், அந்த ஆண்டில் நிஜாருக்குப் பதிலாக சுபாங் தொகுதியில் களமிறங்கிய வழக்கறிஞர் எஸ்.முருகேசன் பிகேஆர் வேட்பாளர் சிவராசாவிடம் தோல்வியடைந்தார்.

சர்ச்சைக்குரிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் பொறுப்பு

டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன்

நிஜார், ஒழுங்கு நடவடிக்கைக் குழுத்தலைவர் பொறுப்பிலிருந்த போதுதான் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன், டாக்டர் ஞானபாஸ்கரன், இரா.மாசிலாமணி போன்ற முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தன.

அந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைகளுக்கு தலைமை வகித்தவர் நிஜார்தான்.

அதன் காரணமாக, பல கண்டனங்களுக்கும் ஆளானார் நிஜார். எனினும் கால ஓட்டத்தில் அந்த சம்பவங்களுக்குப் பின்னர்தான் அவரின் அரசியல் வளர்ச்சி இன்னும் அதிகரித்தது. நேரடியாகக் கட்சித் தேர்தல்களில் அவர் களமிறங்கியதும் அதற்குப் பின்னர்தான்!

கல்வித் தகுதிகள் பல கொண்டவர்

மலாயாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்ற நிஜார் பின்னர் அந்தப் பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

நிஜாரின் இளமைக்கால வரலாறு, ஏழ்மையின் பிடியிலிருந்து பல இந்திய இளைஞர்கள் எப்படி கட்டறுத்துக் கொண்டு, கல்வியின் பலத்தால் சமூகத்தில் முன்னேறினார்கள், பொருளாதார ரீதியாகத் தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள் என்பதன் இன்னொரு பிரதிபலிப்பு.

பேராக் மாநிலத்தின் பின்தங்கிய பகுதியான குரோ-கிளியான் இந்தான் வட்டாரத்தில் 2 ஜூலை 1936-இல் பிறந்தவர் நிஜார். அவர் மாட்டு வண்டியில் பிரசவிக்கப்பட்டார் என்பதால் தனது வாழ்க்கை வரலாற்றை “மாட்டு வண்டிப் பையன்” (The Bullock Cart Boy) என்ற பெயரிலேயே சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வெளியிட்டார்.

ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்

இந்த நூலின் வெளியீட்டு விழா கோலாலம்பூரிலும் பின்னர் பினாங்கிலும் நடந்தேறியது. நிஜாரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் பினாங்கில் இந்த நூலுக்கான வெளியீட்டு விழாவைச் சிறப்பாக நடத்தியிருந்தார்.

அவரின் பெற்றோர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். அவர்கள் உழைத்துச் சம்பாதித்த சொற்ப செல்வத்தையும் இரண்டாவது உலக யுத்தத்தில் அவர்கள் இழந்தனர்.

சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார் நிஜார். தனது 19-வது வயதில் இங்கிலாந்திலுள்ள பிரின்ஸ்போர்ட் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வி பயிலத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பயிற்சிக்கு அப்போதைய மலாயாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 135 பேர்களில் அவரும் ஒருவர்.

மனைவி மோலினா சின்ஹாவுடன் நிஜார்

பிரின்ஸ்போர்ட்டில் படித்தபோதுதான் அவரின் மனைவியான மோலினா சின்ஹாவைக் காதலித்துக் கைப்பிடித்தார். இவர்களின் திருமணம் 1959-இல் அவர்கள் கல்வி முடிந்து மலாயாவுக்குத் திரும்பிய பின்னர் நிகழ்ந்தது.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றிய நிஜார், கனடாவின் வான் கூவர் நகரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் வணிகவியல் நிர்வாகத்துறையில் (எம்பிஏ) முதுகலைப் படிப்புக்கான உபகாரச் சம்பளத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதுகலைப் பட்டத்திற்குப்பின்னர் கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தில் (Australian National University) முனைவர் ஆராய்ச்சிப் படிப்புக்காக இணைந்தார்.

அங்கு அவர் தனது ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு மேற்கு மலேசியாவில் உள்ள இரப்பர் தோட்டங்களில் சம்பளக் கட்டமைப்பு” என்பதாகும் (PhD on “Wage Structure in the Rubber Estates of West Malaysia”).

பல்கலைக் கழக விரிவுரையாளர் பணிக்குப் பின்னர் வங்கியில் சேர்ந்து உயர்ந்த பொறுப்புகளை வகித்தார்.

வங்கிப் பணிக்குப் பின்னர் வணிகத்திலும் வெற்றிகரமாக இயங்கினார். இந்தியர்கள் அதிகம் பங்கு பெறாத பாதுகாவல் துறையில் இறங்கி சிஸ்கோ (CISCO) என்ற பாதுகாவல் நிறுவனம் ஒன்றை தங்கரத்தினம் (சிரம்பான்) என்பவர் 1977-ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். அவருடன் 1983-ஆம் ஆண்டில் பங்குதாரராக இணைந்தார் நிஜார்.

தனது இறுதிக்காலம் வரை அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக பதவி வகித்து வந்தார் நிஜார். அவரின் மகன் ரபிந்தர் சிங் தற்போது அந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

மணிப்பால் மருத்துவக் கல்லூரி மலேசியாவில் அமையப் பாடுபட்டவர்.

அமரர் டத்தோ கு.பத்மநாபன்

இன்று மலாக்காவில் வெற்றிகரமாக செயல்படும் மணிப்பால் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான வணிக ரீதியான கட்டமைப்பை முன்னாள் துணையமைசர் டத்தோ கு.பத்மநாபனுடன் இணைந்து உருவாக்கியவர் நிஜார் என்பதும் பலருக்குத் தெரியாத ஒரு விவரம்.

கல்வியின் மூலம் உயர்ந்த வளர்ச்சியடைந்த நிஜார் தனது வாழ்க்கையின் சுவாரசியமானப் பக்கங்களை ஆங்கிலத்தில் நூல் வடிவில் எழுதி வெளியிட்டார். “மாட்டுவண்டிப் பையன்” “The Bullock Cart boy” என்ற ஆங்கில நூலை வெளியிட்ட நிஜார் அதில் கல்வியின் மூலம் எப்படி தன்னால் உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது என்பதை விவரித்திருந்தார். வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு பல அறிவுரைகளையும அந்த நூலில் நிஜார் வழங்கியிருந்தார்.

நிஜாரின் தந்தையார் அமார் சிங் 1926-இல் ஈயச் சுரங்கத் தொழிலாளியாக கிளியான் இந்தான் பகுதியில், ரஹ்மான் ஹைட்ராலிக் (Rahman Hydraulic) என்ற நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். கால ஓட்டத்தில் நிஜார் வணிகத்தில் முன்னேறியபோது அதே ரஹ்மான் ஹைட்ராலிக் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். நிஜார்  வாழ்க்கையின் இன்னொரு சுவாரசியப் பக்கம் இதுவாகும்.

-இரா.முத்தரசன்