Home நாடு மொகிதின், பெரிக்காத்தான் கூட்டணி அமைச்சர்கள், தலைவர்களுடன் சந்திப்பு

மொகிதின், பெரிக்காத்தான் கூட்டணி அமைச்சர்கள், தலைவர்களுடன் சந்திப்பு

994
0
SHARE
Ad

  • திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் மொகிதின் யாசின்; அன்றே பதவி விலகலாம்
  • இன்று சனிக்கிழமை இரவு பெரிக்காத்தான் ஆதரவுக் கூட்டணித் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்கிறார்.
  • மொகிதினின் அரசியல் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா?

புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அந்த உரையில் பல்வேறு சட்டத் திருத்தங்களையும், சீர்திருத்தங்களையும் மொகிதின் முன்வைத்தார். ஒருங்கிணைந்து பணியாற்ற வரும்படியும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

#TamilSchoolmychoice

மொகிதின் பரிந்துரைகளைப் பரிசீலிப்போம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் அறிவித்திருக்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மொகிதினின் பரிந்துரைகளை நிராகரித்திருக்கின்றன.

பெஜூவாங் நிராகரித்தது

துன் மகாதீர் தலைமையிலான பெஜூவாங் கட்சி மொகிதினுடன் இணைய மாட்டோம் என அறிவித்திருக்கிறது. துன் மகாதீரின் மகனும் பெஜூவாங் தலைவருமான முக்ரிஸ் மகாதீர் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார்.

பக்காத்தான் கூட்டணியும் நிராகரித்தது

மொகிதின் அறிவிப்புக்கு பதிலளித்த பக்காத்தான் கூட்டணி மொகிதின் யாசின் இந்தப் பரிந்துரைகளை எப்போதோ செய்திருக்க வேண்டும், இப்போது இறுதி நேரத்தில் பெரும்பான்மையை இழந்து விட்ட பின்னர் இவ்வாறு சீர்திருத்தங்களை முன்மொழிவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் மன்றம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்தது.

மூடா கட்சித் தலைவர் சைட் சாதிக் சாடினார்

நேற்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசைக்கு பேட்டியளித்த மூடா கட்சியின் தலைவரும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், மொகிதினின் அறிவிப்பைக் கடுமையாகச் சாடினார்.

18-வயதுக்கு மேற்பட்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பது என்பது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதை ஏதோ அரசியல் பண்டமாற்று வியாபாரம்போல் இப்போது வாருங்கள் நிறைவேற்றுவோம் என மொகிதின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என சைட் சாதிக் கூறினார்.

“இவர்கள்தான் கட்சித் தாவல் மூலம் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்ததும், அடுத்தடுத்து ஜோகூர், பேராக், கெடா, மலாக்கா என சில மாநிலங்களில் கட்சித் தாவல் மூலம் மாநில அரசாங்க ஆட்சிகளைக் கவிழ்த்தார்கள். இப்போது கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவருவோம் என எங்களை அழைக்கிறார்கள். இவர்களை எப்படி நம்புவது?” என சைட் சாதிக் சாடினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடை செய்யும் சட்டத்தையும் கொண்டு வருவேன் என்ற அறிவிப்பையும் மொகிதின் நேற்றைய உரையில் விடுத்திருக்கிறார்.

அம்னோவும் நிராகரித்தது

மொகிதினின் அறிவிப்பை அம்னோவின் தலைவர் சாஹிட் ஹாமிடி நிராகரித்தார். மாமன்னருக்கான அதிகாரங்களில் மூக்கை நுழைக்காமல் பெரும்பான்மை இழந்ததை ஒப்புக் கொண்டு கௌரவமாக பதவி விலகுங்கள் என சாஹிட் ஹாமிடியும் தெரிவித்தார்.

இவ்வாறாக அனைத்துத் தரப்பினரும் மொகிதினின் பரிந்துரைகளை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து பிரதமராக நீடிப்பது இனியும் முடியாது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆதரவுத் தலைவர்களைச் சந்திக்கிறார் மொகிதின் யாசின்

இன்று இரவில் மொகிதின் தேசியக் கூட்டணிக்கு ஆதரவாள அமைச்சர்களையும், துணையமைச்சர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே வேளையில் மொகிதினின் நேற்றைய அறிவிப்பு குறித்து அவரை ஆதரிக்கும் சக அமைச்சர்களும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர்களும் கூட அதிருப்தில் இருக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகிதின் பரிந்துரைத்த சீர்திருத்தகங்கள் குறித்துத் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவரின் சில அறிவிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அம்னோவிலிருந்து மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதின் அணியிலிருந்து விலகி மீண்டும் அம்னோவில் சாஹிட் தலைமைத்துவத்தின் கீழ் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் மீண்டும் தேசிய முன்னணி கூட்டம் கூட்டப்படும் என்றும் மசீசவும், மஇகாவும் மீண்டும் பழையபடி அம்னோவுடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் மொகிதின் யாசின்

ஆகஸ்ட் 4-ஆம் தேதி மொகிதின் யாசின் மாமன்னரைச் சந்தித்தபோது (கோப்புப் படம்)

ஆகக் கடைசியானத் தகவல்களின்படி எதிர்வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 16-ஆம் தேதி மொகிதின் மாமன்னரைச் சந்திக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அன்றைய தினமே அவர் பதவி விலகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.