Home நாடு அசார் அசிசானுக்கு மாமன்னர் கடிதம் – சர்ச்சைகள் எழுந்தன

அசார் அசிசானுக்கு மாமன்னர் கடிதம் – சர்ச்சைகள் எழுந்தன

897
0
SHARE
Ad
அசார் அசிசான் ஹாருண்

கோலாலம்பூர் : மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கும்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு மாமன்னர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

மாமன்னர் சார்பில் அரண்மனைக் காப்பாளர் அகமட் பாட்லி ஷாம்சுடின் இந்தக் கடிதத்தை ஆகஸ்ட் 9-ஆம் தேதி அனுப்பியுள்ளார்.

இதற்கு முன்னர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாமன்னருக்கு அவைத் தலைவர் அசார் அசிசான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பிரதமர் மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 106 பேர்தான் என்பதை மாமன்னருக்கு  அசார் அசிசான் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் இத்தகைய ஒரு கடிதம் குறித்து ஊடகங்களில்  எழுப்பப்பட்டபோது, அப்படி கடிதம் எதையும் தான் எழுதவில்லை என அசார் அசிசான் மறுத்திருந்தார்.

அசார் அசிசானின் ஆகஸ்ட் 3-ஆம் தேதியிட்ட கடிதம்

மாமன்னர் அசார் அசிசானுக்கு எழுதிய கடிதத்தில் மற்றொரு முக்கிய விவகாரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மொகிதினை ஆதரிப்பது 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அசார் அசிசான் மாமன்னருக்கு எழுதியிருக்கும் ஆகஸ்டு 3-ஆம் தேதி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அதற்குப் பின்னர் ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 6-ஆம் தேதிகளில் மேலும் 2 அம்னோ அமைச்சர்கள் மொகிதினை ஆதரிக்கவில்லை எனக் கூறி பதவி விலகினர். இதைத் தொடர்ந்து மொகிதினை ஆதரிப்பவர்கள் 104-தான் என்ற நிலைமை ஏற்பட்டடிருக்கிறது என்பதையும் மாமன்னரின் கடிதம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

தற்போது மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மீட்பைத் தொடர்ந்து மொகிதினை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை 100 ஆக மட்டுமே இருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

முகமட் ரஷிட் ஹாஸ்னோனைச் சாடிய அசாலினா ஒத்மான் சைட்

முகமட் ரஷிட் ஹாஸ்னோன்

இதற்கிடையில் மாமன்னர் கடிதம் குறித்து தனக்கு தெரியாது என நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் முகமட் ரஷிட் ஹாஸ்னோன் மழுப்பியிருந்தார்.

அரண்மனையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறியிருந்தார்.

இது நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைக்கு முரணானது என்றும் முகமட் ரஷிட் ஹாஸ்னோன் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாடாளுமன்ற அவையின் மற்றொரு துணைத்தலைவரான அம்னோவின் அசாலினா ஒத்மான் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.

மாமன்னர் அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் தனக்கும் மற்றொரு துணைத் தலைவரான முகமட் ரஷிட் ஹாஸ்னோனுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

“இது உங்களுக்குத் தெரியாதா?” என்றும் ரஷிட் ஹாஸ்னோனை நோக்கி அசாலினா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கோபால் ஸ்ரீராம் சட்டக் கருத்து

நாடாளுமன்ற விவகாரத்தில் மாமன்னரின் அதிகாரங்கள் குறித்துக் கருத்து தெரிவித்திருந்த கோபால் ஸ்ரீராம், நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் மலேசியாவின் அரசியல் அமைப்பு சட்டம் மாமன்னருக்கு எந்தவித அதிகாரங்களையும் வழங்கவில்லை எனக் கூறியிருந்தார்.  நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான கோபால் ஸ்ரீராம், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமாவார்.

எனினும், மாமன்னர் நேரடியாக அவைத் தலைவருக்குக் கடிதம் எழுதி மொகிதின் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு என்பதைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பது இதுவரை மலேசிய அரசியல் காணாத புதிய திருப்பம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

-இரா.முத்தரசன்