கோலாலம்பூர் – 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு மஇகா பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் நன்கொடை தொடர்பான அண்மைய தமிழ்ப் பத்திரிக்கை செய்திகளைத் தொடர்ந்து மஇகா தேசிய உதவித் தலைவரும், முன்னாள் தலைமைப் பொருளாளருமான டத்தோ ஜஸ்பால் சிங் (படம்) சில விளக்கங்கள் தந்திருக்கின்றார்.
எல்லா நிதிகளுக்கும் முறையான கணக்குகள் இருக்கின்றன
தனது அறிக்கையில் ஜஸ்பால் சிங் மேலும் கூறியிருப்பதாவது:
“எனது பதவிக் காலத்தின்போது மஇகாவின் அனைத்து நிதி நிலவரங்களும், வெளிப்படைத் தன்மையுடனும், துல்லியமான கண்காணிப்போடும் எந்தவித முறைகேடுகளும் இன்றி முறையாக வைக்கப்பட்டிருந்தன என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
மஇகாவுக்கென அப்போது கிடைக்கப்பெற்ற நிதிகள் அத்தனையும் உடனுக்குடன் மஇகாவின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.
வெறும் பரபரப்புக்காக மட்டும் அண்மைய சில நாட்களாக தமிழ்ப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட செய்திகளில், “சூட்கேஸ்களில் பணம் பெறப்பட்டது” என்பது போன்ற நம்ப முடியாத தகவல்கள் விரிவாக விவரிக்கப்பட்டது அத்தனையும் பொய்யானவை என்பதோடு, ஜோடிக்கப்பட்டவையும் ஆகும்.
உண்மை என்னவென்றால், தேர்தல் தொடர்பில் பணம் பெறப்பட்டது, விநியோகிக்கப்பட்டது என அனைத்து நடவடிக்கைகளும், வெளிப்படைத் தன்மையுடனும், மிக சாதாரணமான, வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளோடும் மேற்கொள்ளப்பட்டன”
மஇகா முதன் முறையாக தேர்தல் நிதியைக் கையாளவில்லை
“பொதுத்தேர்தல்கள் என்பது மிகவும் சவாலான காலகட்டமாகும். பொதுத் தேர்தலுக்கும் முன்பும், தேர்தல் காலத்திலும், தேர்தலுக்குப் பின்னரும் கூட பணம் தேவைப்படும். அதோடு, மஇகா பொதுத் தேர்தலில் ஈடுபடுவது இது முதன் முறையும் அல்ல. நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து எல்லா பொதுத் தேர்தல்களிலும் மஇகா பங்கு பெற்று வந்திருக்கின்றது. பொதுத் தேர்தலுக்காக தேர்தல் நிதி வசூலிப்பது என்பது கட்சி தேசியத் தலைவரின் தனிப்பட்ட கடமையாகும். அவ்வாறு பெறப்படும் நிதிகள் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதும் தேசியத் தலைவரின் தனிப்பட்ட அதிகார உரிமையாகும்.2013ஆம் ஆண்டு காலத்தில் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் நன்கொடைகள் மூலமாக தேர்தல் நிதி திரட்ட தன்னால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிதிகள் தேர்தலுக்கும் முன்பும், தேர்தல் காலத்திலும், தேர்தல் முடிந்த பின்னரும்கூட பெறப்பட்டன” என அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியிருக்கின்றார்.
தேர்தல் நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்பட்டன
பெறப்பட்ட தேர்தல் நிதிகள் கீழ்க்காணும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன என்றும் ஜஸ்பால் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்:
- கட்சியின் திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் அமுல்படுத்துவதற்கும்;
- பொதுத் தேர்தல் சமயத்தில் கட்சியின் இயந்திரங்களை ஒன்று திரட்டுவதற்கும், இயக்குவதற்கும்;
- பல்வேறு சமூக நலன் பயனளிக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு;
- வசதி குறைந்த, தேவைகள் உள்ள பொதுமக்களின் சமூக நலன்களுக்கான செலவினங்கள்;
- கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காவும், அரசு சாரா இயக்கங்களின் நடவடிக்கைகளுக்காகவும்;
“2014ஆம் ஆண்டில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருந்த மஇகா பொதுப் பேரவையில் இந்தக் கணக்குகள் சமர்ப்பிக்கப்படவிருந்தன. ஆனால், அதற்கு முன்பாக 5 டிசம்பர் 2014இல், சங்கப் பதிவகத்திடம் இருந்து பெற்ற ஒரு கடிதம் மூலமாக, மஇகா மறுதேர்தல்களை நடத்தவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்த மஇகா பொதுப் பேரவையை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக அப்போது நடத்தப்படவிருந்த மஇகா பொதுப் பேரவை இன்றுவரை நடத்தப்படவில்லை. அந்த ஆண்டுப் பொதுப் பேரவை முறையாக நடத்தப்பட்டிருந்தால், அந்தக் கூட்டம்தான் 2013 கணக்குகள் தொடர்பான கேள்விகளை முன்வைப்பதற்கான பொருத்தமான இடமாக இருந்திருக்கும்” என்றும் ஜஸ்பால் சிங் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“நீதிமன்ற நடவடிக்கை எடுப்பேன்”
ஜஸ்பால் சிங்கின் பத்திரிக்கை அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறியிருப்பதாவது:
“இருப்பினும், சில தரப்புகள் – அதிலும் மஇகாவில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் – தற்போது திடீரெனக் கிளம்பி அரையும் குறையுமான செய்திகளைத் திரித்து வெளியிட்டு, உண்மைகளை மறைத்து பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதன் மூலம் மஇகாவில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என்பது குறித்து நான் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளேன். இந்தத் தரப்பினரின் ஒரே நோக்கம் கட்சியின் தோற்றத்தையும், நடப்பு தலைமைத்துவத்தையும் களங்கப்படுத்துவது மட்டும்தான்!”
“இந்தத் தரப்புகளுக்கும், இந்தத் தரப்புகளின் பொய்யான குற்றச்சாட்டு செய்திகளை எனக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் தங்களின் பத்திரிக்கைகளில் வெளியிடுபவர்களுக்கும் இந்த நேரத்தில் ஓர் எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றேன். நான் எனது வழக்கறிஞர்களின் ஆலோசனைப் படி, என் மீதும், கட்சி மீதும் அவதூறு பரப்பி வரும் இந்தத் தரப்புகள் மீதும், இந்த பொய் செய்திகளை வெளியிடுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மற்றவர்களின் மரியாதையையும், மதிப்பையும் குலைக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றேன்”
“அவ்வாறு அவர்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர்களின் செயல்களுக்காக அவர்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர்களை நான் எச்சரிக்க விரும்புகின்றேன்”