புதுடில்லி – 3 நாள் அலுவல் வருகை மேற்கொண்டு புதுடில்லி வந்தடைந்த துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி, தனது வருகையின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
செவ்வாய்க்கிழமை (19 ஜூலை) இரவு மோடியின் அதிகாரத்துவ இல்லத்தில் தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சாஹிட் ஹாமிடியுடன் மோடி அளவளாவுகிறார்…
இந்த சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சாஹிட், பயங்கரவாதத்தைத் துடைத் தொழிப்பதிலும், உலகம் எங்கும் பரவி வரும் தீவரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் மலேசியா சிறந்த முறையில் பங்காற்ற முடியும் என இந்தியா கருதுவதாக மோடி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மலேசியாவின் நடுநிலைக் கொள்கைகள் காரணமாகத்தான் மலேசியாவில் பயங்கரவாதம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் மோடி தெரிவித்தார் என சாஹிட் கூறியுள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
மோடிக்கு, மலேசியாவின் பாரம்பரியத்தை விவரிக்கும் நினைவுச் சின்னத்தை வழங்குகின்றார் அகமட் சாஹிட் ஹாமிடி…
மலேசியாவின் இஸ்லாமியக் கல்வி போதனைகள் குறித்தும் இந்தியா தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் மோடி ஆர்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 200 மில்லியனை நெருங்குவதால், பல்கலைக் கழக படிப்புகள் பாதிப்படையாத வண்ணம், அவர்களுக்கு இஸ்லாமியக் கல்வி போதனைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாகவும் மோடி சாஹிட்டிடம் தெரிவித்துள்ளார்.
மோடியுடன் சாஹிட் ஹாமிடி குழுவினர்…
திங்கட்கிழமை புதுடில்லி வந்தடைந்த சாஹிட் இந்தியாவின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
நேற்று புதன்கிழமை இரவு, புதுடில்லியிலிருந்து புறப்பட்டு, கொழும்பு சென்றடைந்த சாஹிட் இன்று வியாழக்கிழமை முதல் இலங்கைக்கான இரண்டு நாள் அலுவல் வருகை மேற்கொள்கின்றார்.
(படங்கள்: நன்றி – நரேந்திர மோடி மற்றும் அகமட் சாஹிட் ஹாமிடி டுவிட்டர் பக்கம்)