புதுடில்லி – உத்தரப் பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவி மாயாவதியைத் தரக் குறைவாக விமர்சித்த உத்தரப் பிரதேச பாஜகவின் உதவித் தலைவர் தயாசங்கர் சிங் அந்தக் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார்.
கடுமையான கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து வேறு வழியின்றி பாஜக தலைமைத்துவம் தயாசங்கரைக் கட்சியிலிருந்து நீக்கியது.
இதற்கிடையில் பிஎஸ்பி கட்சி தயாசங்கர் மீது காவல் துறையில் புகார் செய்துள்ளது. தயாசங்கரைக் கைது செய்யாவிடில் போராட்டம் வெடிக்கும் என மாயாவதி எச்சரித்துள்ளார்.
தயாசங்கரோ “வாய்தவறி பேசி விட்டேன். மன்னிக்கவும். யாரையும் தரக்குறைவாக விமர்சிப்பது எனது நோக்கமன்று. மாயாவதி பெரிய தலைவர்தான்” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த பாஜக தலைவரும், இந்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் தெரிவிக்கின்றேன், ஒரு தலைவரை அவ்வாறு விமர்சித்திருக்கக் கூடாது என, ராஜ்ய சபாவில் பேசும்போது தெரிவித்துள்ளார்.