நியூயார்க் – தொடர்ந்து நீடித்து வரும் 1 எம்டிபி விவகாரங்களால், பிரதமர் நஜிப்புக்கு மேலும் ஒரு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1எம்டிபி நிறுவனத்திலிருந்து திருடப்பட்ட 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை மீட்க அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகள் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் லோரெட்டா லிஞ்ச் இதுகுறித்து “அமெரிக்க நிதி நடைமுறைகள் ஊழலுக்கு ஏதுவாகப் பயன்படுத்தப்படுவதை நீதித்துறை ஒருபோதும் அனுமதிக்காது” எனக் கூறியுள்ளார்.
“உலகம் முழுவதும் உள்ள ஊழல் புரியும் அதிகாரிகள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். குற்றங்களின் மூலம் பெறப்படும் சொத்துக்களை அவர்கள் அனுபவிப்பதை நாங்கள் எந்தக் காலத்திலும் அனுமதிக்கமாட்டோம்” என சூளுரைத்துள்ளார்.
எஃப்.பி.ஐ (FBI) எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் “மலேசிய மக்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் மோசடிக் குற்றத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என வர்ணித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த பொது (சிவில்) வழக்குகள் எதிலும், பிரதமர் நஜிப்பின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்த வழக்குகளின் விவரங்கள் நஜிப்பின் ஈடுபாட்டை சுட்டிக் காட்டுகின்றன.
“மலேசிய அதிகாரி 1” என்றும் “பணம் மலேசிய அரசாங்கத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டது. அவர் 1 எம்டிபியிலும் அதிகாரப் பொறுப்பு வகிக்கின்றார்” என்றெல்லாம் இந்த வழக்குகள் விவரிக்கின்றன.
பிரதமர் நஜிப் அலுவலகத்தில் இருந்து இதுவரை இதுகுறித்து அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.