Home Featured கலையுலகம் சிவாஜியையும், சத்யஜித்ரேவையும் கரம் கூப்பி வணங்குகிறேன் – செவாலியே விருது பெற்ற கமல் நன்றி!

சிவாஜியையும், சத்யஜித்ரேவையும் கரம் கூப்பி வணங்குகிறேன் – செவாலியே விருது பெற்ற கமல் நன்றி!

721
0
SHARE
Ad

kamal-haasanசென்னை – உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசனின் கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில், பிரெஞ்சு அரசு அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வாட்சாப்பில் குரல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“பிரான்ஸ் அரசு கலை இலக்கியத்துக்காக செவாலியே விருதை எனக்கு அளிக்க முன்வந்துள்ளது. பெருமிதத்துடன் நன்றியுடன் பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன்.”

#TamilSchoolmychoice

“அந்த விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகர் சிவாஜிகணேசனையும், வட நாட்டு பாமரரும் அறியச் செய்த சத்யஜித்ரேயும் என் கரம் கூப்பி வணங்குகிறேன். இந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் ஜிலருக்கும் எனது நன்றி.”

“இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கியப் பணிக்கான ஊக்கியாகவே இந்த விருதை நான் உணர்கிறேன். கலைக் கடற்கரையில் கைம்மண் அளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைக் கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, பெருவித மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர்களின் நினைவையும் உணரச் செய்கிறது.”

“இதுவரையான எனது கலைப்பயணம் தனி மனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி, எழுத்தும், கலையும் அறிவித்த பெரும்கூட்டத்துடனே, நான் ஏற்ற யாத்திரை இது என்பதை உணர்கிறேன். அக் கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள் கூட்டங்கள். நாலு வயது முதல் என் கைபிடித்து, படியேற்றி, பீடத்தில் அமர்த்திப் பார்க்கும் தாய்மையுள்ளம் கொண்ட அவர்களுக்கும் இந்த விருது அர்ப்பணம்.”

“என் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறையை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டமும் போக்கிவிடுகிறது” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை அவரது குரல் வடிவில் கேட்க கீழ்காணும் யூடியூப் இணைப்பைப் பயன்படுத்ததவும்:-