கோலாலம்பூர் – கடந்த 1998-ம் ஆண்டு, தனது தந்தை மீது ஓரினப்புணர்ச்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்கான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூரு இசா வலியுறுத்தியுள்ளார்.
மகாதீர் தலைமையில் தற்போது புதிதாக உருவாகியுள்ள கட்சியுடன், பிகேஆர் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்பாக, மகாதீர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நூருல் இசா தெரிவித்துள்ளார்.
கடந்த 1998-ம் ஆண்டு, செப்டம்பர் 2-ம் தேதி, துணைப்பிரதமராக இருந்த அன்வாரை, அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் பதவி நீக்கம் செய்தார். அதன் பின்னர் ஓரினப்புணர்ச்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அது குறித்து நூருல் கூறுகையில், “ஒரு மகளாக கடந்த 18 ஆண்டுகளாக எனது தந்தை அடையும் எண்ணற்ற வேதனைகளைப் பார்த்து வருகின்றேன். சோடிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு, டாக்டர் மகாதீர், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை” என்று நூருல் இசா தெரிவித்துள்ளார்.