Home Featured கலையுலகம் மலேசியப் போலீசை மிக மோசமாகச் சித்தரிக்கும் ‘இருமுகன்’ – புதிய சர்ச்சை!

மலேசியப் போலீசை மிக மோசமாகச் சித்தரிக்கும் ‘இருமுகன்’ – புதிய சர்ச்சை!

607
0
SHARE
Ad

irumugan1கோலாலம்பூர் – விக்ரம், நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இருமுகன்’ என்ற திரைப்படம் தற்போது பெரும்பாலான மலேசியத் திரையரங்குகளில் கடந்த ஒரு வாரமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து தப்பித்து வரும் பயங்கர குற்றவாளியான லவ், மலேசியாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றான். ஸ்பீடு என்ற ஊக்க வஸ்துவை தயாரிக்க மலேசியாவில் ஒரு இரகசியத் தொழிற்சாலையை அமைத்திருக்கும் அவனைக் கண்டுபிடித்து, அழிக்க இந்தியாவிலிருந்து மலேசியா வருகிறார் முன்னாள் போலீஸ் அதிகாரியான கதாநாயகன் விக்ரம். இப்படியாகப் படத்தின் கதையமைப்பு உள்ளது.

vikramஇக்கதையை மையப்படுத்தி, கிட்டத்தட்ட 80 சதவிகிதக் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் குற்றவாளிகளைக் கண்டறியும் காவல்துறை விசாரணையில், இந்திய காவல்துறைக்கு மலேசியக் காவல்துறை உதவுவது போல் காட்சிகள் உள்ளன.

#TamilSchoolmychoice

அக்காட்சிகளில், மலேசியக் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ள தம்பி இராமைய்யாவை, இந்தியாவிலிருந்து வரும் முன்னாள் போலீஸ் அதிகாரியான விக்ரம் படுமோசமாக நடத்துகிறார். நகைச்சுவைக்காக அக்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும் கூட, ஒட்டுமொத்த மலேசியக் காவல்துறையையும் கேவலப்படுத்துவது போல், ஒரு சில காட்சிகளும், வசனங்களும் அமைந்துள்ளன.

irumuganஉதாரணமாக, சந்தேக நபர் ஒருவரை பிடித்து மலேசியக் காவல்துறை விசாரணை நடத்துகிறது. ஆனால் அந்நபர் உண்மையைச் சொல்வதாய் இல்லை. அப்படி இருக்கும் போது திடீரென விசாரணையில் குறுக்கிடும் கதாநாயகன் விக்ரம், மலேசிய அதிகாரிகளை வெளியே அனுப்பிவிட்டு, கதவைச் சாத்தி அந்நபரை தனது பாணியில் விசாரணை செய்கிறார். உடனே அந்நபர் உண்மையைச் சொல்லிவிடுகிறார். இப்படியாக பல காட்சிகளில் மலேசியக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தம்பி இராமைய்யாவை நகைச்சுவை என்ற பெயரில் மிக மோசமாக நடத்தப்படும் காட்சிகள் உள்ளன.

இந்நிலையில், இது குறித்து பிரபல மலேசிய நடிகரான சசிதரன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்தில், “நான் மலேசிய அதிகாரிகளிடம் ( PDRM, LPF & KDN) ஒன்று கேட்க விரும்புகிறேன். உள்ளூர் இயக்குநர்கள் தங்களது படங்களிலோ அல்லது நாடகங்களிலோ ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தை வைக்க வேண்டும் என்றால், அதற்கான பலக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது உள்ளது. ஆனால் அதுவே வெளிநாட்டில் இருந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் இங்குள்ள போலீஸ் அதிகாரிகளை நகைச்சுவையாகவும், கவனக்குறைவாகவும், விமர்சிக்கும் வகையிலும், சீருடை சரியாக இல்லாமலும், போலீஸ் காரின் மீது கால் வைத்து ஏறும் படியும் எப்படி காட்ட முடிகின்றது? அதிலும் குறிப்பாக, அது போன்ற படங்கள், இங்குள்ள தணிக்கை அதிகாரிகளின் அனுமதியோடு, மலேசியாவிலேயே திரையிடப்படுகின்றது” என்று சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

shasiஅவரது கருத்திற்கு மலேசியக் கலைஞர்கள் பலரும் ஆதரவும் தெரிவித்துள்ளதோடு, அது போன்ற காட்சியமைப்புகள் தங்களது படங்களில் வைக்கும் போது தங்களுக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர்.

படத்தில் அது போன்ற சில வசனங்களும், காட்சிகளும் தணிக்கைக் குழுவினரால் வெட்டப்பட்டிருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக மலேசியக் காவல்துறையின் திறமையை தாழ்த்தும் படியாகவே அந்தக் காட்சியமைப்புகள் தெரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.