Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: இருமுகன் – விக்ரம், நயன்தாரா, ஒளிப்பதிவு இம்மூன்றிற்காகப் பார்க்கலாம்!

திரைவிமர்சனம்: இருமுகன் – விக்ரம், நயன்தாரா, ஒளிப்பதிவு இம்மூன்றிற்காகப் பார்க்கலாம்!

1342
0
SHARE
Ad

iru-mugan-movie-review-and-rating-live-updates

கோலாலம்பூர் – அதாகப்பட்டது.. வில்லனிடம் மனைவியைப் பறிகொடுத்த ரா அதிகாரியான விக்ரம் (அகிலன்), தனக்கு அந்த போலீஸ் வேலையே வேண்டாம் என்று நினைத்து, வடஇந்தியா பக்கம் போய் தலைமறைவாகி, அங்கு குஸ்தி போட்டு பொழுதைக் கழித்து வருகின்றார்.

திடீரென்று, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு தாக்குதல் சம்பவம் நடக்கிறது. அதைக் கண்டுபிடிக்க திறமையான அதிகாரி யார்? என்று போலீஸ் தனது டேட்டா பேசை அலசும்போது, அது அகிலனைக் கைகாட்டுகிறது.

#TamilSchoolmychoice

ஐயயோ, அந்த ஆளா.. அவன் ரொம்ப முரடன் ஆச்சே.. அடங்கவே மாட்டான் என்று ஒரு அதிகாரி எகிற, இன்னொரு அதிகாரியான நாசரோ..இல்ல.. அவன் தான் இந்த வேலைக்குப் பொருத்தமானவன் என்று உத்திரவாதம் கொடுக்கிறார்.

iru-mugan-imageஅப்புறம் என்ன? அகிலனைத் தேடிச் செல்லும் போலீஸ், அவரிடம் உதவி கேட்க, ஆளவுடுங்கடா சாமி என்று விக்ரம் ஒதுங்க, உன் மனைவியைக் கொன்னவன தான் நீ இப்ப கண்டுபிடிக்கப் போற என்று போலீஸ் தனது திறமையைக் காட்டுகிறது.

அப்படியா என்று பல்லைக் கடிக்கும் விக்ரம், பலக் கட்டுப்பாடுகளோடு, மீண்டும் சார்ஜ் எடுக்கிறார் அகிலன் விநோத்தாக..

கேட்கும் போதே.. இது என்ன? விஜயகாந்த் காலத்து அதர பழசான சினிமா ஃபார்முலாவா இருக்கு என்று தானே யோசிக்கிறீர்கள்? ஆமாம்.. அப்படித் தான் இருக்கிறது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுகன்’.

அப்படியானால், இந்தப் படத்தில் சுவாரசியம் தான் என்ன? ரசிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டால் இதோ..

ரசிக்க

iru-mugan-wallpaper-image-06விக்ரம்.. அகிலனாக, ஆஜானுபாகுவான உடற்கட்டோடு ரா (RAW) அதிகாரிக்கே உரிய கம்பீரத்துடன் வருகிறார். அந்தத் தோற்றத்திற்கேற்ற கனமான கரகரப்பான குரல் வேண்டும் என்பதற்காக அதில் கூட கவனம் செலுத்தி மிரட்டியிருக்கிறார்.

லவ்.. கதாப்பாத்திரத்தில், பெண் சாயலில், வாயைக் குவித்து, விரல்களை அசைத்து, நளினத்தில் நயன்தாராவுடன் போட்டியிடுகிறார். அழகான வாயசைவைப் பார்க்கும் போதெல்லாம், தமன்னாவிடம் டியூசன் போயிருப்பாரோ என்ற சந்தேகம் வருகின்றது. துப்பாக்கி இல்லை, கத்தியில்லை, ஆனால் மேக்கப் போட்டே ஆட்களைக் கொல்லுகிறார்.

iru-muganஅடுத்து, நயன்தாராவை ஆக்சனோடு அழகையும் காட்ட வைத்திருக்கிறார்கள். இடைவேளைக்கு முன்பான காட்சியில் புறமுதுகைக் காட்டினாலும் கூட, சண்டைக் காட்சிகளில் எதிரிகளையும் பந்தாடுகிறார். அதோடு, பாடல் காட்சிகளில் வழக்கத்தை விட மிகவும் ஸ்டைலிசாக இருக்கிறார்.

நித்யாமேனன்.. குறைவான காட்சிகளே வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். “உயிருக்குப் பொராடுற இந்தப் பொண்ண விட.. உனக்கு அவங்க தான் முக்கியமா?” இந்த வழக்கமான டயலாக் கூட, நித்தியாவின் உச்சரிப்பில் ரசிக்க வைக்கின்றது.

படத்திற்கு மிக ஸ்டைலிசான வண்ணம் சேர்த்திருப்பதில் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு முக்கியப் பங்கு வகிக்கின்றது. அவரது கேமரா கோணத்தில் மலேசியா அழகில் மிளிர்கிறது.

பெட்ரோனாஸ் டவின் டவர் முதல் புத்ராஜெயா பாலம் வரையில் வளைத்து வளைத்துப் படம் பிடித்திருக்கிறார்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த கோலாலம்பூரின் முக்கியச் சாலைகள் இவ்வளவு அழகா? என்று எண்ணும் அளவிற்கு டாப் ஆங்கில் ஷாட்சில் அசர வைத்திருக்கிறார்.

vikramஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை பலம்.. அகிலனுக்கு ஒரு வகையான பின்னணி இசையும், லவ்வுக்கு ஒரு வகையான பின்னணி இசையும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். என்ன.. ‘ஹலேனா’ பாடலுக்குக் கொடுத்த ரசனையை மற்ற பாடல்களுக்கும் கொடுத்திருக்கலாம்.

மற்றபடி, ஹிட்லர் பற்றிய தகவல், ‘ஸ்பீடு’ மருந்து, லவ் சின்னம், அறிவியல் தியரிகள் ஆகியவை ரசிக்க வைக்கின்றன.

சலிப்படைய வைப்பவை

தம்பி இராமையா என்ற அற்புதமான நடிகரை முற்றிலும் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அவரை முற்றிலும் குணச்சித்திர வேடத்திலாவது பயன்படுத்தியிருக்கலாம். இரண்டும் இல்லாமல், மலேசியா போலீசு .. மலேசியா போலீசு என்று திரும்பத் திரும்ப சொல்ல வைத்து ஓட்டியிருப்பது சலிப்பையே வர வழைக்கிறது.

ஆதிபகவனின் அந்த வில்லன் கான்செப்ட், புலி படத்தின் அந்த குப்பி கான்செப்ட் என ஆங்காங்கே பல சாயல்கள் இருப்பதைக் கூட பொறுத்திடலாம். ஆனால் துப்பாக்கி குண்டு தலையில் துளைத்து, மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தவரை ஒரு ஆதிவாசிக் கூட்டம் மருந்து போட்டுக் காப்பாற்றும் பழை………ய ஃபார்முலாவை இப்பவுமா பயன்படுத்துறது?

iru-mugan-wallpaper-image-07படத்தில் பல லாஜிக் ஓட்டைகள்.. ‘ஸ்பீடு’ மருந்தில் தொடங்கி மலேசியா போலீசின் இணையதளத்தை முடக்குவது வரை நம்ப முடியாத பல காட்சிகளை வைத்து ரசிகனை கேள்வியுடனேயே வீட்டிற்கு அனுப்புகிறது திரைக்கதை அமைப்பு.

இரட்டைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இக்கதையைத் தேர்ந்தெடுத்த விக்ரம், “படத்துல ‘லவ்’ ஏன் என் சாயலில் இருக்க வேண்டும்?” என்று இயக்குநரிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம். காரணம், படத்தில் அதற்குப் பதிலே இல்லை.

மொத்தத்தில், ‘இருமுகன்’ – விக்ரம், நயன்தாரா, படத்தின் ஒளிப்பதிவு  இம்மூன்றிற்காகப் படம் பார்க்கலாம். கதைக்களம், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்தக் கூட்டணி இன்னும் பலமான கைதட்டல்களைப் பெற்றிருக்கும்.

– ஃபீனிக்ஸ்தாசன்