சியோல் – வடகொரியாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்விற்குக் காரணம், அணு ஆயுதச் சோதனையாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், வடகொரியா தனது 4-வது அணு ஆயுதச் சோதனையை நடத்திய அதே இடத்திற்கு அருகில் தான் இன்றைய நில அதிர்வுப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதோடு, இந்த அதிர்வு நிலத்தின் மேற்பரப்பில் தான் உணரப்பட்டுள்ளதாகவும், இயற்கையாக வரும் நில அதிர்வுகள் நிலத்தின் உள்ளே இருந்து வரும் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களைப் பொருட்படுத்தாமல், வடகொரியா கடந்த ஜனவரி மாதம் அணு ஆய்வுச் சோதனை நடத்தியதோடு, தொடர்ச்சியாக ஏவுகணைப் பரிசோதனைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.