Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘மாங்கல்யம் தந்துனானேனா’ – மறக்க முடியாத காதல் பயணம்!

திரைவிமர்சனம்: ‘மாங்கல்யம் தந்துனானேனா’ – மறக்க முடியாத காதல் பயணம்!

1296
0
SHARE
Ad

MTகோலாலம்பூர் – தான் உருகி உருகி காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம். இதை விடக் கொடுமையான வலி இருக்குமா ஒரு ஆணுக்கு? அப்படி ஒரு வலியுடன் சிட்னியிலிருந்து மலேசியா திரும்புகின்றார் கதாநாயகன் கௌதம்.

நடக்கவிருக்கும் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி, தனது காதலியை மீட்டுவிட வேண்டும் என்று நகரில், திருமண விழாக்கள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் அலைந்து திரிகின்றார். அவருக்கு டேக்சி ஓட்டுநர் ஒருவர் பெரும் உதவியாக இருக்கிறார்.

இந்தப் பயணத்தில் பல போராட்டங்களை எதிர்கொள்ளும் கௌதம், தன்னை நேசித்த காதலியை வார்த்தைகளால் காயப்படுத்திய தருணங்களை எண்ணி வருந்துகிறார். அவருக்குள் இருந்த ஈகோ உடைந்து நொறுங்குகிறது.

#TamilSchoolmychoice

இத்தனை அவஸ்தைகளையும் தாண்டி காதலியைக் கண்டுபிடித்தாரா? திருமணத்தை நிறுத்தினாரா? என்பதே கார்த்திக் ‌‌ஷாமலன் இயக்கத்தில், பால கணபதி வில்லியம், ரெனிதா வீரைய்யா, லிங்கேஸ்வரன், குபேந்திரன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ‘மாங்கல்யம் தந்துனானேனா’ என்ற தொலைக்காட்சிப் படம்.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில், சுதந்திர தினச் சிறப்புத் தொலைக்காட்சிப் படமாக இடம்பெற்று, மலேசியத் தொலைக்காட்சிப் படங்களுக்கு புதிய வண்ணம் சேர்த்துள்ளது.

நடிப்பு

MT2கௌதமாக பால கணபதி வில்லியம்.. அக்கதாப்பாத்திரத்திற்கு சரியான பொருத்தம்.. படத்தில் பெரும்பாலான காட்சிகளில் முகத்தில் பதட்டத்தையும், கோபத்தையும், சோகத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம். அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

அக்கதாப்பாத்திரம் படும் வேதனையை படம் பார்க்கும் நாம் உணரும் வகையில், அவரது நடிப்பு மிக எதார்த்தமாக உள்ளது. பால கணபதியின் திரைப்பயணத்தில் இப்படம் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

அபிநயாவாக ரெனீதா வீரய்யா.. அக்கதாப்பாத்திரத்தின் பொறுமையும், நிதானமும், மன இறுக்கமும் நெகிழ வைக்கின்றது. அழுத்தமான அந்த உணர்வுகளை மிக அழகாக தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரெனீதா..

“எனக்குன்னு இங்கே சில பொறுப்புகள் இருக்கு கௌதம்” என்று அவர் பொறுமையாக விளக்கமளிக்கும் காட்சிகளில் நம்மை அறியாமல் அவரின் மேல் ஒரு ஈர்ப்பும், மரியாதையும் ஏற்படுகின்றது. அந்த அளவிற்கு மிக முதிர்ச்சியான நடிப்பு.

டேக்சி ஓட்டுநராக லிங்கேஸ்.. தத்ரூபமான நடித்திருக்கிறார்.. அவரது இருப்பு படத்திற்கு பக்க பலம் சேர்த்துள்ளது. டேக்சி ஓட்டுநர்களின் உடல்மொழியிலிருந்து, அவர்களின் பேச்சு, நடவடிக்கைகள் வரை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

MT3அடுத்ததாக, குபேந்திரன்.. படத்தில் அவருக்கு காமெடிக் கதாப்பாத்திரமா? சீரியசான கதாப்பாத்திரமா? என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இரண்டையும் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். தனது காதலியிடம் அவர் விடைபெறும் அந்தக் காட்சி உருக வைக்கின்றது.

இந்த நான்கு முக்கியக் கதாப்பாத்திரங்கள் தவிர, படத்தில் இடம்பெற்றுள்ள, நடிகர் கேஎஸ்.மணியம், அகோந்திரன் எனத் தெரிந்த முகங்களோடு, மற்ற எல்லா புதுமுக நடிகர்களும், மிக இயல்பாக நடித்திருக்கின்றனர். நடிப்பில் எங்குமே செயற்கைத் தனம் தெரியாதது படத்தின் சிறப்பு.

கதை, திரைக்கதை

கதையைப் பொறுத்தவரையில் ஒரு தொலைக்காட்சிப் படத்திற்குத் தேவையான அத்தனை சுவாரசியங்களையும் கொண்டிருக்கின்றது. திருமணம் சம்பந்தப்பட்ட கதைகள் எப்போதுமே ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவை. காரணம் அதில் நல்லது, கெட்டது என பல திருப்பங்கள் அடங்கியிருக்கும்.

குறிப்பாக, உறவுகளுக்குள் சிக்கல்கள் தொடங்குவது திருமண ஏற்பாடுகளின் போது தான். அங்கு ஈகோ என்ற ஒன்று மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கும்.

திரைப்படங்களில் கூட இப்படிப்பட்ட கதையுடன் வரும் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்று வந்துள்ளது. அந்தவகையில் கபிலனின் கதை மலேசியத் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தையே கொடுத்திருக்கிறது.

BGW7திருமணம் என்பது ஒரு ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் ஏற்றுக் கொள்ளும் சடங்கு மட்டுமல்ல. அவர்களின் குடும்பத்தையும், அவர்களின் இத்தனை வருடப் பழக்கங்களையும் ஏற்றுக் கொள்வது என்பதை மிக அழகாக உணர்த்துகிறது அதற்கு ஏற்ற திரைக்கதை அமைப்பு.

படம் தொடங்கியது முதல் ரசிகனையை ஒருவித பதட்டமான சூழ்நிலையிலேயே கொண்டு செல்கிறது. கௌதம் படும் தவிப்பை ரசிகனுக்கும் கொடுத்து, அப்பயணத்திலேயே அழைத்துச் செல்கிறது.

என்றாலும், காதலை வெளிப்படுத்தும் அந்த அழகான குடைக் காட்சி, வைக்கப்பட்ட இடம் படம் பார்ப்பவர்களின் ஆர்வத்தை சற்று குறைப்பதாகவே தோன்றுகிறது . காரணம், அபியை கௌதம் கண்டுபிடிப்பாரா? இல்லையா? என்று ரசிகன் ஆர்வ மிகுதியில் இருக்கும் போது, திடீரென நிதானமாக வரும் அந்தக் குடை காட்சியில் மனம் லயிக்க மறுக்கிறது. தனியாகப் பார்த்தால் அக்குடைக் காட்சி நிச்சயமாக மிக ரசனையான ஒரு காதல் காட்சி என்பதில் சந்தேகமே இல்லை.

மற்றபடி, “எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை”, “எமோஷனல் இடியட்”, “கடைசி வரை என்னை சிகரெட் பற்ற வைக்கவே மாட்டேல்ல?” போன்ற வார்த்தை ஜாலங்களும், இடையிடையே கதைக்குத் தொடர்பான வகையில், சொருகப்பட்ட அந்த கர்ப்பிணிப் பெண் காட்சி, வானொலி அறிவிப்பாளர் காட்சி ஆகியவை இயக்குநரின் திறமைக்குச் சான்று.

“சாவி உங்கிட்ட இருக்கலாம் வீடு நான் சொல்ற இடம் தான்”, “ஆஸ்திரேலியா போறோம்”, “பொண்டாட்டியா இரு” இப்படியாக காதலிக்கு உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்து வரும் கதாநாயகன்,  “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அனுமதி கேட்பதில் உள்ளார்ந்த அர்த்தம் அடங்கி இருக்கின்றது.

கடைசியாக, அந்த திருப்பம் .. யாரும் கணித்துவிட முடியாத வகையில் அமைந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது மிகச் சிறப்பு.

ஒளிப்பதிவு, இசை

இர்வான் முனீரின் ஒளிப்பதிவு தொலைக்காட்சிப் படத்தை ஒரு திரைப்படம் போல் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டியிருக்கிறது. குறிப்பாக, சாலையில் கார்கள் செல்லும் அந்த டாப் ஆங்கில் ஷாட் படத்தின் தரத்தை கூட்டியிருக்கிறது.

lingesவர்மன் இளங்கோவனின் மனதை வருடும் இசை.. இப்படத்தை மக்கள் என்றும் நினைவில் கொள்ளும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, “ஒரு போதும்”, “அடி பெண்ணே நீ ரதியா.. ரதியா” இந்த இரண்டு பாடல்கள் அவரது திறமைக்கான சான்று. அதேவேளையில், சுருதீஸ் திருமாறன் பாடல் வரிகள் சட்டென மனதில் நின்று விடும் வகையில் மிக எதார்த்தமான வரிகள். நிச்சயமாக இவர்கள் கூட்டணி மிகப் பெரிய இடத்தை அடையும்.

மொத்தத்தில், ‘மாங்கல்யம் தந்துனானேனா’ – மறக்க முடியாத காதல் பயணம்!

மிக விரைவில், அஸ்ட்ரோவில் மறுஒளிபரப்பு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பார்த்து ரசிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு.

-ஃபீனிக்ஸ்தாசன்