கோலாலம்பூர் – வழக்கமாக புதிய திரைப்படங்கள் அனைத்தும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகி வந்த நிலையில், அண்மையில் விக்ரம் நடிப்பில் உருவான ‘இருமுகன்’ கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, வியாழக்கிழமையே வெளியீடு கண்டது.
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, வெள்ளிக்கிழமை அஸ்டமியாக இருந்ததாலும், விக்ரமின் அதிர்ஷ்ட எண் 8 என்பதாலும், வியாழக்கிழமையே வெளியீடு கண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
என்றாலும், தற்போது இந்த வியாழக்கிழமை வெளியீடு உத்திக்கு காரணம் என்னவென்பது ஒரு சில தயாரிப்பாளர்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.
அதாவது, இந்தியாவில் வெள்ளிக்கிழமை காலை படம் திரையிடுவதற்கு முன்பே, வெளிநாடுகளில் வியாழக்கிழமை இரவு முதல் காட்சி திரையிடப்படுவது கடந்த ஓராண்டிற்கும் மேலாக வழக்கத்தில் இருந்து வருகின்றது.
குறிப்பாக, மலேசியா, அரபு நாடுகளில் வியாழக்கிழமையே மக்கள் படம் பார்த்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துவிடுவதால், தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை காலை படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் கொண்ட படங்களை முதல் நாள் பார்ப்பதைத் தள்ளிப் போட்டுவிடுவதாகக் கூறப்படுகின்றது.
இதனால் தான் தற்போது அடுத்தடுத்து வெளிவரவுள்ள புதிய திரைப்படங்கள் வியாழக்கிழமை வெளியீட்டைக் குறி வைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதற்கு உதாரணமாக, பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 22-ம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.