Home Featured நாடு யாஹாயா அவால் தமிழ்ப் பள்ளியில் ஜோகூர் மாநில அளவில் “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” நிகழ்ச்சி

யாஹாயா அவால் தமிழ்ப் பள்ளியில் ஜோகூர் மாநில அளவில் “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” நிகழ்ச்சி

1024
0
SHARE
Ad

yahya-awal-tamil-school-program-ns-rajendran

ஜோகூர் பாரு – நாடெங்கிலும், தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வரும் நிலையில், ஜோகூர் மாநில அளவில் தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு என்ற நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடைபெற்றது. கடந்த ஆண்டும் இதே போன்றதொரு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி யாஹாயா அவால் தமிழ்ப் பள்ளியில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் துறையின் தமிழ்ப் பள்ளிகளுக்கான திட்ட வரைவு இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் கலந்து கொண்டார். (படம்)

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகள் தங்களின் மாணவர்களின் கைத்திறன்களையும், அறிவுத் திறன்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியை இந்த ஆண்டு ஏற்று நடத்திய யாஹாயா அவால் தமிழ்ப் பள்ளி விஞ்ஞானம், தொழில்நுட்பம், கணிதம்,பொறியியல் ஆகிய துறைகளில் தங்கள் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்தின.

பங்கு பெற்ற மற்ற பள்ளிகள் தங்களின் சிறந்த மாணவர்களின் படைப்பாற்றல் திறனை எடுத்துக் காட்டும் வண்ணம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு  செய்திருந்தன. திரளானோர் இந்த நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

“எல்லோருக்கும் எளிய தமிழ்” அறிமுகம்

ellorukkum-eliya-tamil-booth-johor-tamil-school-program

தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக “எல்லோருக்கும் எளிய தமிழ்” என்ற திட்டத்தின் அறிமுகம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் தோற்றுநர்களான முத்து நெடுமாறன், ஆசிரியை கஸ்தூரி இருவரும் இந்த நிகழ்ச்சியைப் படைத்தனர்.

ஒரு தமிழ்ப் பள்ளி ஆசிரியையான கஸ்தூரியின் பயிற்றுவிக்கும் திறன்கள், மாணவர்களுக்கு தமிழை கற்றுத் தருவதில் அவர் பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும், கணினித் துறை வல்லுநரான முத்து நெடுமாறனின் தொழில்நுட்ப பங்களிப்பும் இணைந்த திட்டமாக “எல்லோருக்கும் எளிய தமிழ்” திட்டம் நீண்ட கால பரிசோதனை முயற்சிகளுக்குப் பின்னர் செயல்வடிவம் கண்டுள்ளது.

ellorukkum-eliaya-tamil-children-yahya-awal-school-program-booth

எல்லோருக்கும் எளிய தமிழ் முகப்பிடத்தில் எளிய முறையில்  தமிழ் கற்றுக் கொள்ளும் மாணவர்கள்…

இந்தத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, மாசாய் தமிழ்ப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்முறைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியிலும் செய்முறை விளக்கங்களோடு செய்து காட்டப்பட்டன.

“எல்லோருக்கும் எளிய தமிழ்” திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய மாசாய் தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பெரியாச்சி, இன்றைய நிகழ்ச்சியிலும் முகப்பிடத்திற்கு வருகை தந்து ஆதரவு வழங்கினார்.

ஜோகூரில் தமிழ்ப்பள்ளிகள்

ஜோகூரில் பள்ளி செல்லும் இந்திய மாணவர்களில் ஏறத்தாழ 50% சதவிகிதத்தினர் தமிழ்ப் பள்ளிகளையே தேர்வு செய்கின்றார்கள் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

தற்போது ஜோகூர் மாநிலத்தில் 70 தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1,300 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சுமார் 12,400 மாணவர்கள் ஜோகூர் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சியின் மூலம் மேலும் கூடுதலான மாணவர்களை ஈர்க்க  முடியும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களும் ஆண்டுக்கு ஆண்டு மேம்பாடுகள் கண்டு வருகின்றன. தேசிய மற்றும் அனைத்துலக அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றும் வருகின்றனர்.

கல்வி கற்பிக்கும் அணுகுமுறை, கல்வி பயிலும் அணுகுமுறை இரண்டையும் ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தி செயல்படுத்த ஜோகூர் தமிழ்ப் பள்ளிகள் தற்போது தீவிரமாக முனைந்துள்ளன.