Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: தேவி – பிரபுதேவா, தமன்னா அசத்தல் நடிப்பு, நடனம்! தாராளமாக தரிசிக்கலாம்!

திரைவிமர்சனம்: தேவி – பிரபுதேவா, தமன்னா அசத்தல் நடிப்பு, நடனம்! தாராளமாக தரிசிக்கலாம்!

1197
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவா, கதாநாயகனாக நடித்து தமிழில் மறுப்பிரவேசம் செய்திருக்கும் படம் ‘தேவி’. நடிப்பிற்கு நீண்ட விடுமுறை விட்டிருந்தாலும் கூட, தனது தனித்துவமான நடனத்திறமையையும், இளமையையும் இன்னும் அப்படியே தக்க வைத்திருக்கிறார் மனிதர். அதுவும் தமன்னாவுடனான ஜோடிப் பொருத்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

அதேநேரத்தில், அமலா பாலுடனான மணமுறிவு, குடும்பப் பிரச்சினைகள் போன்ற விவகாரங்கள் அழுத்தினாலும் கூட, ஒரு இயக்குநராக தனது வழக்கமான பாணியை மாற்றி புதிய கதைக்களத்தில் இறங்கி, தனது திறமையை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

கதை

#TamilSchoolmychoice

devi-movie-stills-3படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தவர்கள் நிச்சயமாக இது என்ன மாதிரியான படம் என்பதை எளிதில் கணித்து விடும் படி தான் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களை ஆட்டி வைத்த சிரிப்பு பேய் கதையை தானும் ஒரு கை பார்த்துவிட நினைத்திருக்கிறார் இயக்குநர்.

கிராமத்தில் வளர்ந்த பெண்ணான தமன்னாவை வேண்டா வெறுப்பாகக் கல்யாணம் செய்து மும்பைக்கு அழைத்து வருகிறார் பிரபுதேவா. மும்பையின் பரபரப்பு, கலாச்சாரம் ஆகியவற்றைப் பார்த்து முதலில் மிரளும் தமன்னா, ஒரு கட்டத்தில் திடீரென பக்கா மும்பை பெண்ணாக நடை, உடை, பாவணை என எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறார்.

அது எப்படி? என்பதில் தான் பேயை கதைக்குள் நுழைத்திருக்கிறார் இயக்குநர். இறந்து போன ரூபி என்ற நடிகையின் ஆவி தமன்னாவின் உடம்பிற்குள் புகுந்து கொள்கிறது. ஆட்டி வைக்கும் ரூபி ஆவியின் ஆசை தான் என்ன? அதை நிறைவேற்றினாரா பிரபுதேவா என்பது தான் பிற்பாதி கதை.

படம் பற்றிய அலசல்

devi4பிரபுதேவாவிற்கென்று ஒரு வித உடல்மொழி இருக்கும். நடனத்தால் கவர்ந்திழுத்தவர், தனது அபார நடிப்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களை சில காலம் கட்டி வைத்திருந்தார். இதோ மீண்டும் பிரபுதேவாவின் ஆட்டம் ஆரம்பம் என்பது போல், அற்புதமாக நடித்திருக்கிறார். வயது 40+ ஆகிவிட்ட நிலையில், நடன அசைவில் இன்னும் அதே இளமையுடன் இருப்பது ஆச்சரியப்பட வைக்கின்றது. அதனால் படம் முழுவதும் ரசிகர்களை மகிழ்விப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

தமன்னா .. கிராமத்துப் பெண்ணாகவும், நகரத்துப் பெண்ணாகவும் இரட்டை வேடங்களைத் தாங்கி தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். அதிலும், நடன அசைவுகளில் ஆசிரியர் பிரபுதேவாவிற்கு சிறந்த மாணவியாக மிகச் சிறப்பாக ஆடியுள்ளார். ‘கொக்கா மக்கா’ பாடலில் அவரது நடன அசைவுகள் அசத்தலின் உச்சம்.

ராஜிவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகராகவே வரும் வில்லன் நடிகர் சோனு சூட் தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார். நடிகனுக்கே உரிய உடற்கட்டு மற்றும் உடல்மொழிகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மேனேஜராக வருபவரின் நடிப்பிற்கும் சபாஷ்.

devi2இவர்கள் தவிர படத்தில் நாசர், ஆர்.ஜே.பாலாஜி, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மனுஷ் நந்தனின் பளீச் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகள் ஈர்க்கின்றன.

சாஜித் வாஜித், விஷால் மிஸ்ரா இருவரும் பாடல்களை உருவாக்கியுள்ளனர். பாடல்களில் இந்தி படச் சாயல் சிலருக்கு ஈர்க்கலாம். சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். கோபி சுந்தரின் பின்னணி இசை அருமை.

devi3திரைக்கதையைப் பொறுத்தவரையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காமெடிக் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாவதற்கு ஏற்ற வகையில் படம் இயக்கப்பட்டிருப்பதால், சில காட்சிகள் டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

devi1என்றாலும், பிரபுதேவா – தமன்னா காமெடி கலாட்டா, தமன்னாவின் கவர்ச்சி, நடிப்பு போன்றவை ரசிகர்களை இரண்டு மணி நேரம் திரையரங்கில் கட்டிப் போடுகின்றது.

பேய் படமாக இருந்தாலும் கூட, முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் தேவியை தாராளமாக தரிசிக்கலாம்.

-சுரேஸ்