கோலாலம்பூர் – நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவா, கதாநாயகனாக நடித்து தமிழில் மறுப்பிரவேசம் செய்திருக்கும் படம் ‘தேவி’. நடிப்பிற்கு நீண்ட விடுமுறை விட்டிருந்தாலும் கூட, தனது தனித்துவமான நடனத்திறமையையும், இளமையையும் இன்னும் அப்படியே தக்க வைத்திருக்கிறார் மனிதர். அதுவும் தமன்னாவுடனான ஜோடிப் பொருத்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
அதேநேரத்தில், அமலா பாலுடனான மணமுறிவு, குடும்பப் பிரச்சினைகள் போன்ற விவகாரங்கள் அழுத்தினாலும் கூட, ஒரு இயக்குநராக தனது வழக்கமான பாணியை மாற்றி புதிய கதைக்களத்தில் இறங்கி, தனது திறமையை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
கதை
கிராமத்தில் வளர்ந்த பெண்ணான தமன்னாவை வேண்டா வெறுப்பாகக் கல்யாணம் செய்து மும்பைக்கு அழைத்து வருகிறார் பிரபுதேவா. மும்பையின் பரபரப்பு, கலாச்சாரம் ஆகியவற்றைப் பார்த்து முதலில் மிரளும் தமன்னா, ஒரு கட்டத்தில் திடீரென பக்கா மும்பை பெண்ணாக நடை, உடை, பாவணை என எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறார்.
அது எப்படி? என்பதில் தான் பேயை கதைக்குள் நுழைத்திருக்கிறார் இயக்குநர். இறந்து போன ரூபி என்ற நடிகையின் ஆவி தமன்னாவின் உடம்பிற்குள் புகுந்து கொள்கிறது. ஆட்டி வைக்கும் ரூபி ஆவியின் ஆசை தான் என்ன? அதை நிறைவேற்றினாரா பிரபுதேவா என்பது தான் பிற்பாதி கதை.
படம் பற்றிய அலசல்
தமன்னா .. கிராமத்துப் பெண்ணாகவும், நகரத்துப் பெண்ணாகவும் இரட்டை வேடங்களைத் தாங்கி தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். அதிலும், நடன அசைவுகளில் ஆசிரியர் பிரபுதேவாவிற்கு சிறந்த மாணவியாக மிகச் சிறப்பாக ஆடியுள்ளார். ‘கொக்கா மக்கா’ பாடலில் அவரது நடன அசைவுகள் அசத்தலின் உச்சம்.
ராஜிவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகராகவே வரும் வில்லன் நடிகர் சோனு சூட் தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார். நடிகனுக்கே உரிய உடற்கட்டு மற்றும் உடல்மொழிகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மேனேஜராக வருபவரின் நடிப்பிற்கும் சபாஷ்.
மனுஷ் நந்தனின் பளீச் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகள் ஈர்க்கின்றன.
சாஜித் வாஜித், விஷால் மிஸ்ரா இருவரும் பாடல்களை உருவாக்கியுள்ளனர். பாடல்களில் இந்தி படச் சாயல் சிலருக்கு ஈர்க்கலாம். சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். கோபி சுந்தரின் பின்னணி இசை அருமை.
பேய் படமாக இருந்தாலும் கூட, முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் தேவியை தாராளமாக தரிசிக்கலாம்.
-சுரேஸ்