சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சனிக்கிழமை, அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார்.
பின்னர் அங்கு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் சிறப்பு மருத்துவர்களைச் சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் நலமாக உள்ளார். அவர் பூரண உடல்நலம் பெறுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழு உடல் நலத்துடன் அவர் விரைவில் வீடு திரும்புவார்.” என்று தெரிவித்தார்.
மேலும், “காவிரி பிரச்னைக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தமிழக உரிமையை மீட்டுத் தந்த நிலையில், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டை சந்தித்து பேசினேன். அவரிடம் பேசுகையில், எங்கள் மாநில தலைவருக்காக இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்ததற்காக நன்றி கூறினேன்” என்று வைகோ கூறினார்.