Home Featured நாடு கவிழும் அபாயத்தில் 2 தேசிய முன்னணி மாநில அரசாங்கங்கள்!

கவிழும் அபாயத்தில் 2 தேசிய முன்னணி மாநில அரசாங்கங்கள்!

1072
0
SHARE
Ad

mahathir-muhyiddin

கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் பெர்சாத்து கட்சிக்குத் தாவியதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி அரசாங்கம் முதல் முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

56 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜோகூரில் பெரும்பான்மை பெற ஒரு கட்சி குறைந்தது 28 தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற குறைந்தது 38 தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

ஜோராக் சட்டமன்ற உறுப்பினர் ஷாஹாருடின் சாலே, மொகிதின் தலைமையேற்றுள்ள பெர்சாத்து கட்சியில் சேர்ந்திருப்பதால் தே.மு.பலம் தற்போது 37-ஆகக் குறைந்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அது ஜோகூரில் இழந்துள்ளது.

தற்போது 37 தொகுதிகளை மட்டும் தேசிய முன்னணி கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் 19 தொகுதிகளைக் கொண்டிருக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் 18 தொகுதிகளாகும். ஜோகூர் மாநில அரசாங்கம் பெரும்பான்மையை இழப்பதற்கு மேலும் 10 பேர் தேசிய முன்னணியிலிருந்து விலகவேண்டும் என்பதால், இன்றைய சூழ்நிலையில் அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை. இதனால், ஜோகூர் மாநில அரசாங்கம் கவிழும் அபாயத்திலும் இல்லை.

திரெங்கானு – பேராக் மாநிலங்களின் நிலைமைகள் வேறு

ஆனால், திரெங்கானு, பேராக் ஆகிய இரண்டு மாநிலங்களில் நிலைமையே வேறு.

இந்த இரண்டு மாநிலங்களிலும் தலா இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய முன்னணியில் இருந்து விலகி, எதிர்க்கட்சிகள் பக்கம் சாய்ந்தால் போதும், அந்த 2 மாநில அரசாங்கங்களும் கவிழ்ந்து விடும். அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்படலாம் அல்லது புதிய சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்.

மகாதீர்-மொகிதின் இணைந்த புதிய பெர்சாத்து கட்சி, அம்னோவை எவ்வளவு தூரம் பிளவுபடுத்த முடியும் என்பதை வைத்துத்தான், அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற முடியுமா என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

ஜோகூர் மாநிலத்தைத் தொடர்ந்து, பேராக் மாநிலத்திலும், திரெங்கானுவிலும் சில அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களை பெர்சாத்து கட்சி தன்பக்கம் இழுத்துவிட்டால், அதன்பின்னர் அந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி கவிழ்ந்து விடும். எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்ற முடியும்.

பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே, இரண்டு மாநிலங்களை எதிர்க்கட்சிகள் கைப்பற்றக் கூடிய அபாயம் தற்போதைய சூழலில் நிலவுகின்றது.

-இரா.முத்தரசன்