சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.50 மணி நிலவரம்) கடந்த ஒரு மணி நேரமாக தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் – ஏன் உலகம் முழுவதுமே – ஜெயலலிதா உடல் நலம் குறித்த பல்வேறு பரபரப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
மலேசிய நேரப்படி சுமார் 8.00 மணியளவில் தமிழகத்தின் தொலைக்காட்சி அலைவரிசையான தந்தி தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பில் தோன்றிய, அந்த அலைவரிசையின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, “நாம் எதிர்பார்க்காதது நடந்து விட்டது. ஜெயலலிதா காலமாகி விட்டார். அப்போலோ மருத்துவமனையில் இருந்து நமக்குக் கிடைத்த மிகவும் நம்பகமான தகவல் இது. கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்” எனத் தெரிவித்தார்.
இந்த செய்தி பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் நமக்கு எழுகின்றது என்றும் ரங்கராஜ் பாண்டே, தனது தொலைக்காட்சி அறிவிப்பின்போது தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மற்ற இந்தியத் தொலைக்காட்சிகளும் ஜெயலலிதா காலமாகி விட்டார் என செய்திகள் வெளியிட்டன.
சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
அப்போலோ மருத்துவமனை முன் கூடியிருந்த அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஜெயலலிதா மறைவு குறித்த செய்தியால் கதறி அழுத காட்சிகளும் தமிழகத் தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டன.
இத்தனை செய்திகளுக்குப் பின்னர்தான் நாமும் செல்லியலில் ஜெயலலிதா மறைவு குறித்த செய்தியை வெளியிட்டோம். அந்த செய்தியிலும் முன்னெச்சரிக்கையாக, ‘தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவித்துள்ளன” என்றும் ‘இதுகுறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை’ என்றும் தெரிவித்திருந்தோம்.
ஜெயலலிதா மறைவு குறித்த செய்திகளை ஊடகங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என அப்போலோ விடுத்த அறிக்கை
அடுத்து அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கைக்கு அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, யாரும் எதிர்பாராத விதமாக – மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியாக – “ஜெயலலிதா மறைந்து விட்டார் என்ற செய்தி பொய்யானது. அவர் இன்னும் உயிர்க்காப்பு கருவிகளின் துணையுடன் போராடி வருகின்றார்” என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த மறுப்பு அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் மீண்டும் முதன்மைச் செய்தியாக இடம் பெறத் தொடங்கியது.
நாமும் உடனடியாக செல்லியலில் இருந்து ‘ஜெயலலிதா மறைவு’ குறித்த செய்தியை மீட்டுக் கொண்டு விட்டோம்.
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த அடுத்த கட்ட அதிகாரபூர்வ அறிவிப்புகள் அப்போலோ மருத்துவமனையில் இருந்தோ அல்லது தமிழக அரசிடமோ இருந்து வெளிவரும் வரை அனைத்து ஊடகங்களும் தற்போது காத்திருக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர்கள் குழு தங்களின் முயற்சியில் வெற்றி பெற வேண்டும், ஜெயலலிதா முழு உடல் நலம் பெற வேண்டும், என்பதுதான் – அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நாம் உட்பட – அனைவரின் விருப்பமும், பிரார்த்தனையுமாகும்!
-செல்லியல் ஆசிரியர் குழுவினர்