சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடல் தங்கக் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்கு எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது நல்லுடல் தாங்கிய சந்தனப்பேழை மெல்ல குழிக்குள் இறக்கப்பட்டு அதன் பின்னர் மலர்கள் தூவப்பட்டன.
தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலர் இறுதிச் சடங்குகள் செய்த வைணவ பட்டர் வழங்கிய பசும்பாலை அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தெளித்தனர்.
இராணுவ மரியாதையுடன் நடைபெற்ற நல்லடக்கச் சடங்குகள்….
தொடர்ந்து ஐதீக முறைப்படியிலான சில பொருட்கள் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தூவப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவரது நல்லுடல் மண் கொண்டு மூடப்பட்டது.
அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கான நினைவிடம் நிர்மாணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1987-ஆம் ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில், இதே ராஜாஜி மண்டபத்தில் அரங்கேறியது இந்தக் காட்சி. 29 ஆண்டுகள் கழித்து, அதே ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவின் நல்லுடல் இன்று கிடத்தி வைக்கப்பட்டிருந்ததுதான் வரலாற்றுபூர்வ சோகம்.