சென்னை – மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிற்கு கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும், திரையுலகத்தினரும், பொதுமக்களும் இன்று செவ்வாய்க்கிழமை கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான ரஜினி காந்த், ஜெயலலிதாவின் மறைவை அறிந்த உடன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே தனது வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
அதோடு, தனது குடும்பத்தினருடன் ராஜாஜி அரங்கிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதாவின் மறைவிற்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தி, மிகச் சுருக்கமாகவும், பெயர் குறிப்பிடப்படாமலும் உள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று மட்டுமே தெரிவித்திருந்தார்.
தான் வாழும் மாநிலத்தின் முதல்வரின் மறைவை, அவரது பெயரைக் கூட குறிப்பிடாமல் கமல்ஹாசன் பதிவு செய்துள்ள இரங்கல், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த கமல்ஹாசன் நேரில் வராத காரணமும் அவர் தமிழகத்தில் தான் உள்ளாரா? அல்லது வெளிநாட்டில் இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இன்னும் அவர் சார்பில் அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியாகவில்லை.
எனினும், கமல் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதனிடையே, நடிகர் அஜித்தும் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. என்றாலும், பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் வர இயலவில்லை என்று அவர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.