லாஸ் ஏஞ்சல்ஸ் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர்களுக்கு, இந்தப் புத்தாண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக விடிந்தது.
காரணம், ஹாலிவுட் ஹில்சின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த ‘ஹாலிவுட் (Hollywood)’ என்ற பெயர், இரவோடு இரவாக ‘ஹாலிவீட் (Hollyweed)’ என்று மாறியிருந்தது. இது அவ்வழியாகச் சென்ற பொதுமக்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் தொலைபேசி வழியாக அழைத்து விளக்கம் கேட்டு குடைந்து எடுத்துவிட்டார்கள்.
அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் விசாரணையில் இறங்கிய போது, யாரோ ஒரு விஷமி இரவில் மலை உச்சிக்குச் சென்று கருப்பு நிறத் தார்பாலின்களைப் பயன்படுத்தி ஹாலிவுட்டில் இருந்த ‘O’என்ற எழுத்துகளை, ‘e’ என்று மாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது அதிகாரிகள் அந்த தார்பாலின்களை அகற்றி பலகையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதோடு, இச்செயலைப் புரிந்த விஷமியைக் கண்டறியும் விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
கடந்த நவம்பர் மாதம் கலிபோர்னியா வாக்காளர்கள் ‘முன்மொழிதல் 64’-ஐ ஏற்றுக் கொண்டதன் விளைவாக வரும் 2018-ம் ஆண்டில் இருந்து மரிஜூனா என்ற போதை வஸ்துவை, பொழுதுபோக்கிறாகப் பயன்படுத்தும் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில், ஹாலிவுட் பெயர் மாற்றும் செயல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கடந்த 1923-ம் ஆண்டு, வீடமைப்புத் திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ‘ஹாலிவுட்லேண்ட் (Hollywoodland)’ என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய பெயர் பலகை, பின்னர் 1940-ம் ஆண்டு, ‘ஹாலிவுட் (Hollywood) என்று மாற்றப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 1976-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி, கல்லூரி மாணவர் ஒருவர் திரைச்சீலைகளைப் பயன்படுத்தி ‘ஹாலிவுட்’ பலகையில் பெயரை மாற்றம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.