Home Featured வணிகம் மலிண்டோ பயணிகள் இனி கேஎல் சென்ட்ரலிலேயே ‘செக் இன்’ செய்யலாம்!

மலிண்டோ பயணிகள் இனி கேஎல் சென்ட்ரலிலேயே ‘செக் இன்’ செய்யலாம்!

999
0
SHARE
Ad

Malindo

கோலாலம்பூர் – மலிண்டோ ஏர் விமானங்களில் பயணம் செய்யவிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மலிண்டோ ஏர் நிறுவனம்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உங்கள் விமானப் பயணத்தை மேற்கொள்வதற்கு, கேஎல் சென்ட்ரல் இரயில் நிலையத்திலேயே, புதிதாகத் துவங்கப்பட்டிருக்கும் மலிண்டோ ஏர் சோதனை மையத்தில் (Check In) உங்களது பெட்டிகளைக் கொடுத்து பயண இருக்கைகளுக்கான அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இவ்வசதி நேற்று செவ்வாய்க்கிழமை போக்குவரத்துத் துணை அமைச்சர் டத்தோ அசிஸ் கப்ராவி தலைமையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.

இவ்வசதியைப் பயன்படுத்தப் போகும் பயணிகள் தங்களது விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக வந்து கேஎல் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உள்ள கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் புறப்பாடு மையத்தில் உள்ள மலிண்டோ ஏர் சோதனை மையத்தில் பெட்டிகளை ஒப்படைக்கலாம்.

கேஎல் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு பெட்டிகளைக் கொண்டு செல்லும் கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிமுக விழாவில் கலந்து கொண்ட டத்தோ அசிஸ் கப்ராவி பேசுகையில், “நகரத்தில் இருந்து கேஎல்ஐஏ-விற்கு, கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் மூலமாக இடைவிடாமல் பரிமாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதனால் பயணிகள் கேஎல்ஐஏ விமானத்தில் உள்ள சோதனை மையங்களில் நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கவிருக்கும் அதிவிரைவு இரயில் மூலமாக சிக்கலில்லாத சுகமான பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த வசதி நமது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை தான் நாட்டிற்கு மிக முக்கிய வருமானம். எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரன் ராம மூர்த்தி கூறுகையில், “நகர் சோதனை சேவையை (City Check -In Service) நாங்கள் வழங்குவது கோலாலம்பூருடன் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதோடு, எங்களுக்கு ஒரு மைல்கல்லாகவும் அமைகின்றது. கேஎல் சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சேவை பயணிகளின் பயண அனுபவத்தை இனிமையாக்குவதோடு, அதிகரித்து வரும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கும் வகையிலும் உள்ளது” என்று தெரிவித்தார்.

Malindo1அதோடு, கேஎல் சென்ட்ரல், மேடான் துவாங்கு மற்றும் என்யு சென்ட்ரல் (NU Sentral)  என மூன்று இடங்களில் மலிண்டோ விமான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், கேஎல் சென்ட்ரலில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள மையத்தில் மட்டும் மாதத்திற்கு 20,000 வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்க முடியும் என்றும் சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, எக்ஸ்பிரஸ் இரயில் லிங்க் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் செயற்குழு தலைவர் டான்ஸ்ரீ மொகமட் நட்ஸ்மி மொகமட் சாலே கூறுகையில், “உலகில் சோதனைச் சேவைகளை (Check in Service) நகரங்களில் வழங்கும் வசதி சில இடங்களில் மட்டுமே உள்ளது. அதில் கோலாலம்பூரும் ஒன்று. இதன் மூலம் விமான நிலையம் செல்வதற்கு முன்பே பயணிகள் தங்களது பெட்டிகளை ஒப்படைத்துவிட்டு இனிய பயணம் மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

மலிண்டோ ஏரின் கேஎல் செண்ட்ரல் சோதனைச் சேவை மையம் காலை 5 மணிக்குத் துவங்கப்பட்டு இரவு 9 மணி வரை செயல்படும். விமானப் பயணம் செய்யும் பயணிகள் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் புறப்பாடு மையத்தில் உள்ள மலிண்டோ ஏர் மையத்தில் தங்களது பெட்டிகளை ஒப்படைத்துவிடலாம்.

மலிண்டோ ஏர் டிக்கெட் வழங்கும் அலுவலகம் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும். அதில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரையிலும் செயல்படும் என்று மலிண்டோ அறிவித்துள்ளது.

-ஃபீனிக்ஸ்தாசன்