புதுடில்லி – ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்ற சட்டப் போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால விண்ணப்பங்களும் எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதி விசாரிக்கப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் வழக்கறிஞர் ஒருவர் மத்திய அரசாங்கத்தின் விலங்கு நல வாரியத்தின் சார்பில் இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆனால், இந்த மனுவுக்கு விலங்கு நல வாரியத்தின் முன் அனுமதி பெறப்படவில்லை என்பதால் நீதிமன்றத்தை ஏமாற்றும் நோக்கில் இந்த மனு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே, அந்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய வேண்டும் என்றும் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக பீட்டா என்ற விலங்கு நல அமைப்பும் விண்ணப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து விண்ணப்பங்களையும் விசாரிக்க ஜனவரி 31-ஆம் தேதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.