திரிகோணமலை (இலங்கை) – மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அரசு விருந்தினராக இலங்கைக்கு சிறப்பு வருகை மேற்கொண்டிருக்கிறார்.
இன்று சனிக்கிழமை (6 ஜனவரி) திரிகோண மலையில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
தமிழர்கள், இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் மூவினமும் அதிகமாக வாழும் திரிகோணமலையில் ஒரு வரலாற்றுப் பூர்வ நிகழ்ச்சியாக இன்று இந்த ஜல்லிகட்டு நடைபெற்றது. அதில் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஆளுநரின் சிறப்பு விருந்தினராக, அரசு மரியாதையோடு பங்குகொண்டு திறந்து வைத்தது மலேசியத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஓர் அம்சமாகும்.
சரவணனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரம், முதல் முறையாக இலங்கையைக் கடந்து அயல் நாட்டில் வாழும் ஒரு தமிழருக்கு இலங்கையில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று கலாச்சார ரீதியாக உலகம் முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
மலேசியாவில் மட்டுமின்றி, தன் தமிழ் மேடைப் பேச்சுத் திறனுக்காகவும், தமிழ் இலக்கிய ஆளுமைக்காகவும் அயல்நாடுகளிலும் உரை நிகழ்த்தவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அடிக்கடி அழைக்கப்படும் மலேசிய அரசியல் தலைவராக டத்தோஸ்ரீ சரவணன் திகழ்கிறார்.
அந்த வகையில் இலங்கையின் திரிகோணமலையில் பெருமைக்குரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை திரிகோணமலை ஆளுநரின் அதிகாரபூர்வ அழைப்பிற்கேற்ப, டத்தோஸ்ரீ சரவணன் திறந்து வைத்தது, மலேசியாவுக்கு வெளியிலும், உலகத் தமிழர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மதிப்பையும, மரியாதையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.