Home நாடு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மாற்றம் – எங்களுக்கே தெரியாது – அதிர்ச்சியில் முதலமைச்சர்

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மாற்றம் – எங்களுக்கே தெரியாது – அதிர்ச்சியில் முதலமைச்சர்

383
0
SHARE
Ad
சௌ கோன் இயோ

ஜோர்ஜ் டவுன் – கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பினாங்கு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ தெரிவித்திருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசியபோது இதுகுறித்து பினாங்கு மாநில அரசாங்கத்திடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மத்திய அரசாங்கத் தரப்பு இது குறித்து தங்களிடம் தொடர்பு கொள்ளவே இல்லை என்பதால் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும் சௌ தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“100 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் இருந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம், திடீரென ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒற்றுமைத் துறை அமைச்சிடம் விளக்கம் கோரப்படும்” என்றும் சௌ குறிப்பிட்டார்.

திடீரென மாற்றப்பட்ட
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்

1906-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது முதல் பினாங்கு மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இனி மத்திய அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வரும் என நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 5-ஆம் தேதி) ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் அறிவித்தார்.

மித்ரா என்னும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவும் ஒற்றுமை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மித்ரா ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்படும் முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தவரை அப்போது செடிக் என அழைக்கப்பட்ட மித்ரா – பிரதமரின் நேரடிப் பார்வையில் பிரதமர் துறையின் ஓர் அங்கமாக இயங்கி வந்தது. ஆனால் அடுத்து வந்த பிரதமர்கள் இதனை ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வந்தனர்.

மஇகா விடுத்த கோரிக்கைகளின் காரணமாக, பிரதமராக இருந்தபோது இஸ்மாயில் சாப்ரி மீண்டும் மித்ராவை பிரதமர் துறை அமைச்சுக்கு மாற்றினார்.

தற்போது மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது மித்ரா. பிரதமர் மேற்கொண்ட மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கூறியிருந்தார்.

இந்து அறப்பணி வாரியம் மாற்றப்பட்டது ஏன்?

மித்ராவின் மாற்றத்தோடு பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது இந்துக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பினாங்கு மாநிலத்துக்கு மட்டுமே உரிய – பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1906-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக அமைக்கப்பட்டு – இன்றுவரை பினாங்கு மாநில அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கிவரும்  பினாங்கு இந்து அறப்பணி வாரியம் திடீரென ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு அமைப்புகளும் “நாட்டில் உள்ள இந்தியர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நீண்டகாலத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஒற்றுமைத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்திய சமூகத்தில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஒற்றுமைத் அமைச்சகம் தொடர்ந்து உதவி செய்வதோடு கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் நிலையை உயர்த்த உதவும், என்றும் ஆரோன் அகோ டகாங். கூறியிருக்கிறார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாகம் கலைக்கப்படுமா? அல்லது புதிய ஆணையர்கள் நியமிக்கப்படுவார்களா? அதன் அலுவலகம் பினாங்கில் தொடர்ந்து செயல்படுமா? அல்லது ஒற்றுமைத் துறை அமைச்சில் நிர்மாணிக்கப்படுமா? அதன் நிதி நிர்வாகம் இனி யார் கையில்? என்பது போன்ற பல கேள்விகளை பிரதமரின் இந்த முடிவு எழுப்பியுள்ளது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பினாங்கு தீவில் உள்ள ஐந்து அறக்கட்டளைகள், சொத்துகள் மற்றும் 13 கோவில்களை நிர்வகிக்கிறது. இது பினாங்கில் ஆண்டுதோறும் தைப்பூசம் மற்றும் பொங்கல் விழாக்களை நடத்துகிறது.

குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் 11 ஆணையர்கள் (கமிஷனர்) இந்த அமைப்பை நடத்துகின்றனர்.

இவர்கள் அனைவரும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் பினாங்கு ஆளுநரால் (கவர்னரால்) நியமிக்கப்படுகின்றனர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தற்போதைய தலைவர் ஜசெகவைச் சேர்ந்த ஆர்எஸ்என் ராயர் ஆவார். இவர் ஜெலுத்தோங் நாடாளுமன்ற  உறுப்பினருமாவார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் பினாங்கின் செனட்டரான டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர் அருணாசலம் ஆவார். ஆணையர்களாக, பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, மஇகா பினாங்கு மாநிலத் தலைவர் ஜெ.தினகரன், ஜசெகவின் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் கே குமரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராயர், ஒற்றுமை அமைச்சகத்தின் மேற்பார்வையை வரவேற்பதாகவும், இதன் மூலம் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கூடுதல் நிதி மானியங்களைப் பெறும் என்று நம்புவதாகவும் கூறினார்.

“பினாங்கில் ஒற்றுமை என்ற கருப்பொருளின் கீழ் தைப்பூசத்தை கொண்டாட உள்ளதால், இது நல்ல நேரத்தில் வருகிறது. வாரியத்திற்கு ஒரு பெரிய வருடாந்திர மானியம் கிடைக்கும் என்று நம்புகிறோம், எனவே வாரியம் தொடர்ந்து கோவில்களை நிர்வகிக்கவும், பொதுவாக இந்து நலனைக் கவனித்துக்கொள்ளவும் முடியும். இதற்கு நாங்கள் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர் இந்து மற்றும் இந்திய விவகாரங்களில் அக்கறை காட்டுகிறார் என்பதை இந்த முடிவு காட்டுகிறது” என்றும் ராயர் கூறியிருக்கிறார்.

பினாங்கு மாநில அரசாங்கத்திடம் இருந்து இந்த அமைப்பின் கட்டுப்பாடு புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்டதால், வாரியத்தின் சுயாட்சி இழக்கப்படுமா என்று கேட்டதற்கு, ராயர் “ஒருமைப்பாட்டு அமைச்சகத்தின் முடிவுகளை செவிமெடுக்கவும் அவர்களுடன் இணைந்து பணிபுரியவும் வாரியம் தயாராக உள்ளது,” என்று கூறினார்.