கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் மீண்டும் மஇகா மத்திய செயலவையில் நியமனம் பெற்றிருப்பதற்கு கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதியின் தலைவரும், முன்னாள் செனட்டருமான டத்தோ சந்திரசேகர் சுப்பையா வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
சந்திரசேகர் சுப்பையா மஇகா கூட்டரசுப் பிரதேசத்தின் முன்னாள் துணைத் தலைவருமாவார்.
“கட்சியில் ஒற்றுமையைக் கொண்டுவருவதற்குப் பாடுபடும் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் முயற்சிகளுக்கு நான் பாராட்டு கூறுகின்றேன். கடந்த கால கசப்புகளை மறந்து கட்சியை புதிய திசையில் கொண்டு செல்லும் அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாக மீண்டும் சோதிநாதனை மத்திய செயலவையில் இடம் பெறச் செய்திருப்பதற்கும் நான் பாராட்டு தெரிவிக்க விரும்புகின்றேன். இதன் மூலம், சோதிநாதனின் அரசியல் அனுபவங்களையும், சேவைகளையும் கட்சி பகிர்ந்து கொள்ள முடியும்” என்றும் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் சந்திரசேகர் தெரிவித்தார்.
“இனியும் மீண்டும் மீண்டும், கடந்த கால கசப்புகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காமல், நாம் மஇகாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதற்கு கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்துவதே முக்கிய செயலாக இருக்க முடியும். அப்போதுதான் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் மஇகாவும், தேசிய முன்னணியும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் என்பதோடு, இந்திய சமுதாயத்தின் மத்தியில் மஇகாவுக்கு மதிப்பும், ஆதரவும் பெருகும். அந்த வகையில் சோதிநாதனின் இணைப்பும், மத்திய செயலவை நியமனமும் கட்சியில் ஒற்றுமை மோலோங்குவதற்கு நிச்சயம் உதவும்” என்றும் சந்திரசேகர் சுப்பையா கூறினார்.