கிள்ளான் – கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கபபட்டிருந்த எஸ்.பாலமுருகன் (வயது 44) மரணமடைந்த சம்பவத்தில், அப்போது பணியில் இருந்த 10 காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்கள்.
எனினும், அவர்களில் யாரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை என வடக்கு கிள்ளான் காவல்துறைத் தலைவர் ஏசிபி மொகமட் யூசோப் மாமட் கூறினார்.
மேலும், பாலமுருகனின் உடம்பில் காயங்களும், கீறல்களும் இருந்ததாக, அவரது குடும்பத்தினர் கூறி வருவது குறித்துக் கருத்துரைத்த மொகமட் யூசோப், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
அடுத்த வாரத்தில், அவரது மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வரும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் மொகமட் யூசோப் குறிப்பிட்டார்.