Home நாடு சிறைச்சாலை கைதி முகமட் இக்பால் அப்துல்லா மரணம் – விசாரணை கோருகிறார் வழக்கறிஞர் மனோகரன்

சிறைச்சாலை கைதி முகமட் இக்பால் அப்துல்லா மரணம் – விசாரணை கோருகிறார் வழக்கறிஞர் மனோகரன்

639
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவல்களிலும் கைதிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது.

ஆகக் கடைசியாக நேற்று திங்கட்கிழமை முகமட் இக்பால் அப்துல்லா என்ற இந்திய முஸ்லீம் கைதி ஒருவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் மரணமடைந்திருக்கிறார்.

அவரின் வழக்கறிஞர் எம்.மனோகரன் இந்த விவரத்தை வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முகமட் இக்பால் அப்துல்லா பள்ளிக் குழந்தைகளுக்கான வாகனத்தை (வேன்) ஓட்டுபவராவார். கடந்த 9 மாதங்களாக அவர் கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் காரணமாக சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று தனக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக தஞ்சோங் காராங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வயது 29.

மரணமடைந்த முகமட் இக்பால் அப்துல்லா

அவரின் குடும்ப வழக்கறிஞரான எம்.மனோகரன் முகமட் இக்பால் அப்துல்லா மீது உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென (போஸ்ட் மார்ட்டம்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலில் செப்டம்பர் 2020-இல் முகமட் இக்பால் அப்துல்லா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சுமார் 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் வார்டன் ஒருவரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அந்த இரண்டு தடவைகளிலும் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதால் அவரின் நல்லுடல் சவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனோகரன் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் செலாயாங் பகுதியைச் சேர்ந்த முகமட் இக்பால் அப்துல்லா மேலும் 20 பேர்களுடன் கொலைக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டிருந்தார். அவர்களில் இருவர் அவரின் மூத்த சகோதரர்களாவர். கைது செய்யப்பட்ட பின்னர் இரு வாரங்கள் கழித்து அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அப்போதிருந்தே தனக்கு வயிற்று வலி இருப்பதாக அவர் கூறி வந்தார் என வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்திருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை காலை சுங்கை பூலோ சிறைச்சாலையின் மருத்துவ மையத்தில் தள்ளுவண்டியில் முகமட் இக்பால் அப்துல்லா அமர்ந்திருக்கக் காணப்பட்டார்.

அதன் பின்னர் அவர் தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.

தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடியபோது, தான் செப்டம்பர் 2020-இல் கைது செய்யப்பட்டபோதும், மூன்று வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கைது செய்யப்பட்டபோதும் தாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது அவர் வயிற்று வலியால் அவதிப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

கடைசியாகத் தான் இக்பாலை பிப்ரவரியில் பார்த்தபோது அவர் உடல் மெலிந்து பலவீனமாகக் காணப்பட்டார் என அவரின் மனைவி நூர்சாம்சியா யாக்காத்தாலி கூறினார் என்றும் வழக்கறிஞர் மனோகரன் குறிப்பிட்டார்.

இக்பாலின் இரண்டு மூத்த சகோதரர்கள் தற்போது பொக்கோக் சேனா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தனது கணவர் இக்பாலை காவல் துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மருத்துவமனை அதிகாரிகளும் முறையாகக் கவனிக்கத் தவறிவிட்டனர் என நூர்சாம்சியா காவல் துறையில் புகார் ஒன்றை நேற்று செய்திருக்கிறார்.

இரத்தக்கட்டு காரணமாக அவதிப்பட்ட தனது கணவர் மோசமான உடல்நிலையைக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு உடனடியாக மருத்துவ கவனிப்பு வழங்கப்படவில்லை என்றும் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.