Home நாடு “நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள்” அவைத் தலைவர்களிடம் மாமன்னர் மீண்டும் வலியுறுத்து

“நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள்” அவைத் தலைவர்களிடம் மாமன்னர் மீண்டும் வலியுறுத்து

1282
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது அறைகூவலைத் தொடர்ந்து மாமன்னர் இன்று காலையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் அரண்மனையில் சந்தித்துப் பேசினார்.

அவர்களோடு நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான், டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் ஆகியோரும் நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட்டும் இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என மாமன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மாமன்னர் சார்பில் அந்த அறிக்கையை அரண்மனைக் காப்பாளர் அகமட் பாடில் ஷாம்சுடின் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

அரசியல் அமைப்பு சட்டம் 150 (3) இன்படி அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டதும் அது தொடர்பான சட்டங்களும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் மாமன்னரின் அறிக்கை தெரிவித்தது.

தேவைப்பட்டால் அவசரகால சட்டங்களை நீக்குவதற்கும் நாடாளுமன்றம் முடிவு செய்யலாம்.  அதே வேளையில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்கள் தொடர்ந்து சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி அத்தியாவசியமான முடிவுகளைச் செய்ய வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் மாமன்னரைச் சந்திக்கச் செல்லும் முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் நாடாளுமன்றத்தை எப்போது கூட்டுவது என்பது குறித்து பிரதமர் மட்டுமே மாமன்னருக்கு ஆலோசனை கூற முடியும் எனத் தெரிவித்தார்.

சட்ட சிக்கல் எழலாம்

நாளையோடு நாடாளுமன்றம் கூடி ஆறுமாதங்கள் முடிந்துவிட்டன என்பதால் நாடாளுமன்றத் தவணை இயல்பாகவே முடிவுக்கு வந்து விட்டது – காலாவாதியாகிவிட்டது என்ற சட்ட சிக்கலும் சில வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் மலாய் ஆட்சியாளர்கள் ஆகஸ்ட் 1-க்குப் பிறகு அவசரகால சட்டம் நீட்டிக்கப்படாது என்றும் அறிவித்தார்கள்.

அதற்கு முன்பாக நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் மாமன்னர் 5 நாட்கள் கால இடைவெளியில் ஒருவர் ஒருவராகச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

இதற்கிடையில், சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் விடுத்த அறிக்கை ஒன்றில் நாடாளுமன்றம் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பதை அமைச்சரவை மட்டுமே நிர்ணயிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.

ஜனவரி மாதத்தில் கொவிட்-19 தொடர்பாக அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதிருந்து நாடாளுமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை.

படங்கள் : நன்றி : இஸ்தானா நெகாரா முகநூல் பக்கம்