கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் ஏற்படும் இறப்புகள் தொடர்பாக தேசிய சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப முழுமையான விசாரணையைத் தொடங்குமாறு உள்துறை அமைச்சகம் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தடுப்புக் காவலில் இறப்புகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்காக அவ்வப்போது, சந்தேக நபர்களை தடுத்து வைத்திருப்பது குறித்த நடைமுறையை மேம்படுத்த, காவல் துறை மூலம் அமைச்சகம் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை கூட்டணி பிரதிநிதிகள் வியாழக்கிழமை உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த ஒரு மனுவை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையின்படி, அண்மையில் ஏ. கணபதி மற்றும் எஸ்.சிவபாலன் ஆகிய இரு கைதிகளின் மரணங்கள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் தடுப்புக் காவலில் இறப்பு வழக்குகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“வேலையின் போது கவனக்குறைவாக குற்றத்தைச் செய்த எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அது கூறியது.