சென்னை (மலேசிய நேரம், சனிக்கிழமை மதியம் 3.00) – தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் (இந்திய நேரப்படி) துவங்கியது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை வாக்கெடுப்பு, சபாநாயகர் தனபால் முன்னிலையில் நடைபெறவிருக்கின்றது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை மற்றொரு நாளில் நடத்தும்படி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு ஒரு தரப்பு கோரிக்கை விடுத்தது.
ஆனால் இவை அத்தனையையும் சபாநாயகர் தனபால் மறுத்ததால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மேஜையின் மீது ஏறியும், காகிதங்களைக் கிழித்து வீசியும் அமளியில் ஈடுபட்டதால், அவையைப் பிற்பகலுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.