Home Featured நாடு சிகாமாட்டில் ஊர் ஒன்றுகூடி வைத்த பொங்கல் விழா!

சிகாமாட்டில் ஊர் ஒன்றுகூடி வைத்த பொங்கல் விழா!

1041
0
SHARE
Ad

subra-segamat-ponggal-1சிகாமாட் – கடந்த 11 பிப்ரவரி 2017ஆம் நாள், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா தாமான் டேசா இந்தியா வட்டார மக்கள் ஆதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மொத்தம் 3 அங்கங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வட்டார மக்கள் மிகுந்த ஆதரவை நல்கி இந்த நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்தி வெற்றிப் பெற செய்தனர்.

subra-ponggal-segamat-3ஒவ்வொரு இல்லமாக வருகை தந்து, ‘ஒற்றுமைப் பொங்கலுக்கு’ கைப்பிடி அரிசி பெறும் சுப்ரா…

#TamilSchoolmychoice

முதல் அங்கமாக மதியம் 2.00 மணி தொடங்கி 4.00 மணி வரையில்  கோலம் போடுதல், தோரணம் பின்னுதல், சரம் தொடுத்தல் போன்ற பண்பாட்டு விளையாட்டுகள் உட்பட மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற்றன. பல பங்கேற்பாளர்கள் ஆர்வத்தோடு இந்தப் போட்டிகளில் பங்குபெற்றனர்.

இரண்டாம் அங்கமாக, இதுவரை நடந்திராத அளவில் புதிய அம்சத்திலும் புத்தாக்கச் சிந்தனையிலும் மலர்ந்த பொங்கல் ஊர்வலம் நடைபெற்றது.

subra-ponggal-segamat-6

கரகாட்டக்காரர்களின் நடனங்களுடன் டாக்டர் சுப்ரா ஊர்வலமாக சென்ற காட்சி…

இது முழுக்க முழுக்க சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களது எண்ணத்தில் உதித்த சிந்தனையாகும் என பொங்கல் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தாமான் டேசா இந்தியா வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 40 இந்தியர்கள் வாழும் வீடுகளுக்கு டாக்டர் சுப்ரா தனது துணைவியாரோடும், ஏற்பாட்டுக் குழுவினரோடும், பண்பாட்டு அடிப்படையில் புடைசூழ ஊர்வலமாய்ச் சென்றனர்.

subra-ponggal-segamat-4தாமான் டேசா இந்தியா வட்டார இந்தியக் குடும்பம் ஒன்றுடன் சுப்ரா தம்பதியர்….

அவர்களை அப்பகுதி மக்கள் அகமும் முகமும் மலர அன்போடு வரவேற்றனர். ஒரு சிலர் அவர்களை ஆரத்தி எடுத்தும் வரவேற்றது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வயதான பெரியவர்கள் டாக்டர் சுப்ராவையும் அவரது துணைவியாரையும் ஆரத் தழுவி அன்பைப் பரிமாறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.

ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தோடு சுப்ரா மற்றும் அவரது துணைவியாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஓர் அமைச்சர், தங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், தேர்தல் இல்லாத காலகட்டத்திலும், அவர்களது இல்லம் தேடி வந்த ஒரு பூரிப்பும் மகிழ்ச்சியும் அப்பகுதி வாழ் மக்கள் முகங்களில் நன்கு வெளிப்பட்டது.

subra-ponggal-segamat-5பொங்கல் ஏற்பாடுகளைத் தனது துணைவியாரோடு பார்வையிடும் சுப்ரா…

ஊர்வலத்தின்போது, ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு கைப்பிடி அளவிலான அரிசி சுப்ராவிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் வழங்கப்பட்ட அரிசியை மொத்தமாகக் கொண்டு மதியம் 6 மணியளவில் ஒரே பொங்கலாக, மக்கள் பொங்கலாக, ஒற்றுமைப் பொங்கலாக வைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் பெரும் சிறப்பாகும்.

அதேநேரத்தில், உறி அடித்தல் கரும்பு சாப்பிடுதல் போட்டிகளும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

subra-segamat-ponggal-2

தாமான் டேசா இந்தியா வட்டாரத்தின் ஓர் இந்தியக் குடும்பத்தினருடன் சுப்ரா 

தொடர்ந்து, மூன்றாம் அங்கமாக கலை, பண்பாட்டு அம்சங்கள் நிறைந்த படைப்புகள் நடைபெற்றன. மாணவர்களின் பாண்பாட்டு நடனங்கள், மாறுவேடப் போட்டி, சேலை அழகு இராணி போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றதோடு போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா வரலாற்றுபூர்வமான இந்நிகழ்ச்சியின் சிறப்புகளையும் அழகையும் விவரித்தார். மேலும், “இன்று பொங்கிய பொங்கலானது ஒருவர் வீட்டு அரிசியில் பொங்கியதன்று; மாறாக பலர் வீட்டு அரிசியில் பொங்கிய ஒற்றுமைப் பொங்கல்” என்று கூறி அப்பகுதி வாழ் இந்திய மக்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகவும் கூறினார். 50 குடும்பங்களின் ஒற்றுமை உணர்வில் உருவான பொங்கலைச் சுவைக்கும் வாய்ப்புப் பெற்றதாகவும் சுப்ரா தனது உரையில் மனம் நெகிழக் கூறினார்.