Home Featured நாடு விபத்தில் சிறார்கள் மரணம்: சோகத்தில் கண்ணீர் சிந்திய ஜோகூர் சுல்தான்!

விபத்தில் சிறார்கள் மரணம்: சோகத்தில் கண்ணீர் சிந்திய ஜோகூர் சுல்தான்!

1173
0
SHARE
Ad

Johor sultanஜோகூர் பாரு – இன்று சனிக்கிழமை அதிகாலை ஜோகூர் பாருவில், சாலையோரம் கூட்டமாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த 8 முதல் 16 வயது வரையிலான சிறார்கள் மீது, அவ்வழியே வந்த கார் ஒன்று மோதியதில், 8 சிறார்கள் மரணமடைந்திருப்பதோடு, மேலும் 8 சிறார்கள் படுகாயங்களுடன் சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த சிறார்களின் பெற்றோரைச் சந்தித்த ஜோகூர் சுல்தான், சோகத்தில் கண்ணீர் சிந்தினார்.

எப்போதும் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், குறிப்பாக இரவு நேரங்களில் இது போல் சாலைகளில் செல்ல அனுமதிக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“நானும் மகனை இழந்திருக்கிறேன். உங்களின் சோகம் எனக்குப் புரியும்” என்று அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக என்எஸ்டி வெளியிட்ட செய்தியில் 9 சிறார்கள் மரணமடைந்ததாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், ‘தி ஸ்டார்’ இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ இடத்தில் 6 சிறார்களும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 சிறார்களும் என மொத்தம் 8 சிறார்கள் மரணமடைந்திருப்பதாக ஜோகூர் பாரு தெற்கு ஓசிபிடி துணை ஆணையர் சுலைமான் சாலே கூறியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், விபத்துற்குள்ளான காரை ஓட்டி வந்தவர் 22 வயதான பெண் என்பது தெரியவந்திருக்கிறது.

காரை செலுத்தி வந்து கொண்டிருந்த போது, சிறார்கள் நடு சாலையில் இருந்ததால், இருட்டில் ஒன்றும் தெரியவில்லை என அப்பெண் காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.