Home Featured நாடு மகாதீர்-நஸ்ரி கோலகங்சாரில் சந்திப்பு – ஆனால் விவாதமில்லை!

மகாதீர்-நஸ்ரி கோலகங்சாரில் சந்திப்பு – ஆனால் விவாதமில்லை!

778
0
SHARE
Ad

mahathir-nazri-kuala kangsar

கோலகங்சார் – பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர்- டான்ஸ்ரீ நஸ்ரி அசிஸ் இருவருக்கும் இடையிலான விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இன்று சனிக்கிழமை அவர்கள் இருவரும் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, கோலகங்சாரில் சந்தித்துக் கொண்டனர்.

மகாதீரை சிற்றுண்டிக்கு நஸ்ரி அழைக்க, அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து, ‘லக்சா’ மீ உணவையும், ‘செண்டோல்’ என்னும் குளிர்பானத்தையும் உண்டு, அளவளாவிக் கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், அதிகமாக பேசிக் கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

இன்று சனிக்கிழமை பிற்பகலில் கோலகங்சாரிலுள்ள டத்தாரான் சாயோங் லெம்பா என்ற இடத்திற்கு தனது பெர்சாத்து கட்சிக் குழுவினருடன் வருகை தந்த துன் மகாதீரை நஸ்ரி எதிர்கொண்டு சந்தித்தார். பெர்சாத்து கட்சியின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள மகாதீர் கோலகங்சாருக்கு வருகை தந்தார்.

மகாதீருடன் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மா அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் வருகை தந்தனர்.

mahathir-nazri-kuala kangsar-meetingமகாதீரையும், சித்தி ஹஸ்மாவையும் உணவருந்த அழைத்துச் செல்லும் நஸ்ரி…

நஸ்ரியை பெர்சாத்து கட்சியினர் சுமுகமான முறையில் வரவேற்றதோடு, அவருடன் பலர் தங்களின் செல்பேசிகளின் வழி தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டனர்.

இருதரப்பினருக்கும் இடையில் சுமுகமான, இணக்கமான சூழல் நிலவியது என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

மகாதீருக்கும், நஸ்ரிக்கும் இடையிலான விவாதம் கோலகங்சாரில் நடைபெறுவதற்கு  காவல் துறையினர் அனுமதி மறுத்தத்தைத் தொடர்ந்து அந்த விவாதம் ஒத்தி வைக்கப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி ஷா ஆலாம் நகரில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விவாதம் ஒத்திவைக்கப்பட்டாலும், கோலகங்சாரில் மகாதீருடன் மரியாதை சந்திப்பு ஒன்றை நடத்த நஸ்ரி விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்பவே இன்றைய சந்திப்பு நடைபெற்றது.

இதற்கிடையில், ஷா ஆலாமில் மகாதீர்-நஸ்ரி இடையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் விவாதத்திற்கு இதுவரை அதன் ஏற்பாட்டாளர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை என காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் இன்று தெரிவித்தார்.

1எம்டிபி, மகாதீர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த அயல்நாட்டு நாணயப் பரிமாற்றங்கள் மற்றும் பூமிபுத்ரா மலேசியா பைனான்ஸ் ஊழல் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு, இந்த விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

-படங்கள்: நன்றி-மலேசியா கெமிலாங் டுவிட்டர் பக்கம்